எம்பி பெயரை பயன்படுத்தி வேலை மோசடி.. திமுக கூட்டணி ஊராட்சி தலைவர் கைது!
Author: Hariharasudhan16 November 2024, 6:45 pm
குமரியில் எம்பி விஜய் வசந்த் பெயரைப் பயன்படுத்தி ரயில்வே வேலை மோசடியில் ஈடுபட்டதாக ஊராட்சி மன்றத் தலைவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி: குமரி மாவட்டம், மார்த்தாண்டம் அடுத்த கொல்லஞ்சி ஊராட்சி மன்றத் தலைவராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சலோமி சோபிதாஸ் உள்ளார். இவர், கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் எம்பி பெயரைப் பயன்படுத்தி, ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் மோசடியில் ஈடுபட்டு உள்ளதாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
இதன்படி, நபர் ஒன்றுக்கு தலா 15 லட்சம் முதல் 20 லட்சம் ரூபாய் வரை பெற்றுக் கொண்டு போலி நியமன ஆணைகளை வழங்கியதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டி, கடந்த ஜூன் மாதம் போலீசில் புகார் அளித்து உள்ளனர். ஆனால், இந்தப் புகாரின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, பாதிக்கப்பட்டவர்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இதனையடுத்து, இது தொடர்பாக தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையில், இந்த மோசடி விவகாரத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் சலோமி சோபிதாஸ், கணவர் சோவிந்தராஜ் மற்றும் அவரது தோழி சிந்து ஆகியோர் சம்பந்தப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
ஆனால், அவர்கள் மூவரும் தலைமறைவாகி உள்ளனர். இந்த நிலையில், சலோமி சோபிதாஸ், அவரது கணவர் சோவிந்தராஜ் மற்றும் தோழி சிந்து ஆகிய மூவரையும் குமரி தனிப்படையினர் கைது செய்து உள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: நச்சுப் பாம்பு மதவாத சக்திகளுக்கு துணை போய்விடக்கூடாது ; விஜய்க்கு திமுக கூட்டணி எம்பி வைத்த டிமாண்ட்!
முன்னதாக, கடந்த ஜூன் மாதம் கொல்லஞ்சி ஊராட்சி மன்றத் தலைவி சலோமி சோபிதாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சமுக விரோதிகள், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அவதூறு செய்து சுவரொட்டி ஒட்டியுள்ளதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கன்னியாகுமரி மாவட்ட ஊராட்சி நல அமைப்பு சார்பில் மாவட்ட எஸ்பியிடம் புகார் அளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.