கொசஸ்தலை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு.. தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் தனித்தீவாக மாறிய கிராமங்கள்.. கயிறு கட்டி பொதுமக்கள் மீட்பு..!!
Author: Babu Lakshmanan12 December 2022, 6:35 pm
திருவள்ளூர் ; திருவள்ளூர் அருகே கொசஸ்தலை ஆற்றின் வெள்ளப்பெருக்கு காரணமாக தரை பாலம் மூழ்கியதால், பேரிடர் மீட்பு படை மூலம் கயிறு கட்டி பொதுமக்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.
தொடர் கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டம் சுப்பாரெட்டிபாளையம் பள்ளிபுரம் தரைபாலத்தை கடந்து கொசஸ்தலை ஆற்று வெள்ள நீர் செல்கிறது. இதனால், தீவு போன்று அப்பகுதி மாறியதால், பேரிடர் மீட்பு படையினர். கயிறு கட்டி பொதுமக்களை பாதுகாப்பு மீட்டனர்.
தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கனமழை காலங்களில் இப்பகுதியில் தரை பாலசாலை மூழ்கி விடுவதால் படகு போக்குவரத்து ஏற்பாடு செய்து வெள்ளம் வடியும் வரை சென்று வருவதாகக் கூறப்படுகிறது.
தற்போது மீண்டும் அதே நிலை ஏற்பட்டுள்ளதால், தகவல் அறிந்து மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன், பொன்னேரி வட்டாட்சியர் செல்வகுமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு அப்பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களுக்கு உறுதி அளித்தனர்.
மேலும், அப்பகுதியில் ரப்பர் படகு மூலம் பொதுமக்கள் செல்வதற்கு தேவையான நடவடிக்கை தற்காலிகமாக மேற்கொண்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.