கோத்தகிரியில் பயங்கரம்… சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து ; 8 வயது சிறுமி உயிரிழப்பு…!
Author: Babu Lakshmanan4 May 2024, 9:21 am
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி – மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் பவானிசாகர் காட்சி முனை அருகே சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை பெரம்பூர் பகுதியைச்சேர்ந்த குழந்தைகள் உட்பட 31 பேர் படுகாயம் என முதற்கட்ட தகவல்கள் வெளகயாகியுள்ள நிலையில்,சம்பவ இடத்தில் விபத்தில் சிக்கியவர்களை தீயணைப்பு,சமூகநல அமைப்பினர் மூலம் மீட்கப்பட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: நள்ளிரவில் பரபரப்பு.. சவுக்கு சங்கர் திடீர் கைது… கோவை போலீசார் அதிரடி!!
நீலகிரி மாவட்டத்திற்கு சென்னை பெரம்பூரில் இருந்து குழந்தைகள் உட்பட 31 பேர் சுற்றுலா பேருந்தில் உதகைக்கு வருகை புரிந்து, பல்வேறு சுற்றுலா தலங்களை கண்டு கழித்த பின், கோத்தகிரி வழியாக சொந்த ஊருக்கு திரும்பி சென்று உள்ளனர். அப்போது, கோத்தகிரி குஞ்சபனை சோதனை சாவடியை தாண்டிச் சென்ற சுற்றுலா பேருந்து பவானிசாகர் காட்சிமுனை பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது, கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி சுமார் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதனை அறிந்த மேட்டுப்பாளையம் காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் மற்றும் சமூக நல அமைப்பினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று சுற்றுலா மினி பேருந்தில் சிக்கிய நபர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், 8 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், பேருந்தில் பயணித்த 30 பேர் பலத்த மற்றும் சிறு சிறு காயங்களுடன் மீட்கப்பட்டு 108 மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது காவல்துறையின் முதற்க்கட்ட விசாரணையில் குழந்தை உட்பட 31 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பேருந்து விபத்து ஏற்பட்ட இடத்தில் காவல்துறையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விபத்து காரணமாக மேட்டுப்பாளையம் கோத்தகிரி மலைப்பாதையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு சாலையின் நடுவே சுமார் இருபுறமும் 10 கிலோ மீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.