இருளிலும் ஒளிர்ந்த குதிரைகள்… கோவை மக்களை குஷிப்படுத்திய குதிரை சாகசம் : கோவை விழா கொண்டாட்டத்தில் உற்சாகம்!!
Author: Babu Lakshmanan9 January 2023, 10:49 am
கோவை விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற ‘ஈக்வைன் ஜிம்க்கானா’ கலை நிகழ்ச்சி பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.
கோயம்புத்தூர் விழா 2023ன் ஒரு பகுதியாக ஈக்வைன் ட்ரீம்ஸ் (Equine Dreams)நிறுவனம் சார்பில் ‘ஈக்வைன் ஜிம்க்கானா’ எனும் கலை நிகழ்ச்சி நேற்று அவிநாசி சாலை – நவ இந்தியா பகுதியில் உள்ள அலெக்சாண்டர் குதிரையேற்ற கிளப் வளாகத்தில் நடைபெற்றது.
இதற்கான அனுமதி அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட்டது. மாலை 3 மணிக்கு துவங்கிய இந்த கலை நிகழ்ச்சியில் குழந்தைகள் விளையாடி மகிழ 10க்கும் மேற்பட்ட விளையாட்டுக்கள் நடத்தப்பட்டன. அலெக்சாண்டர் குதிரையேற்ற கிளப்பின் இளம் வீரர்கள் குதிரைகளுடன் தடை தாண்டும் சாகசங்களை செய்து காண்போரை மகிழ்ச்சியாக்கினர்.
குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் குதிரை பயிற்சியாளர்களின் உதவியுடன் இலவசமாக குதிரை சவாரி செய்திடவும் வாய்ப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் இருளில் ஒளிரும் குதிரைகளின் அணிவகுப்பும் குதிரைகளின் நடனமும் நடைபெற்றது. இத்துடன் DJ ஸ்டுவர்ட் மற்றும் DJ டோவினோ வழங்கிய பாடல்கள் அனைவரையும் ஆட்டம் போடவைத்தது. 600க்கும் அதிகமான பார்வையாளர்கள் இந்த நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.