மாடு மேய்க்கச் சென்ற பெண் காயங்களுடன் சடலமாக மீட்பு : நடவடிக்கை எடுக்கக் கோரி சடலத்துடன் உறவினர்கள் சாலைமறியல்…

Author: kavin kumar
24 January 2022, 10:26 pm

தூத்துக்குடி : கோவில்பட்டி அருகே மாடு மேய்க்கச் சென்ற பெண் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி உண்மையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கக் கோரி பெண்ணின் சடலத்துடன் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கயத்தாறு தெற்கு சுப்பிரமணியபுரம் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சின்னத்துரை என்பவரின் மனைவி ஜோதியம்மாள் (25). மாடு மேய்க்கும் தொழிலாளியான இவர், கடந்த 22ஆம் தேதி கயத்தாறில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் மாடுகளை மேய்க்கச் சென்றுள்ளார். இந்த நிலையில், ஜோதியம்மாள் தலையில் பலத்த காயத்துடன் கிடந்துள்ளார். இதை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜோதியம்மாளை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், ஏற்கேனவே ஜோதியம்மாள் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஜோதியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஜோதியம்மாள் உடல் உடற்கூறாய்வு முடித்து இன்று அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இளம் பெண் மர்ம மரணத்தின் உண்மையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க கோரியும், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், அவரது உறவினர்கள் ஜோதியம்மாள் உடலுடன் திடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையெடுத்து கயத்தார் தாசில்தார் பேச்சிமுத்து, டி.எஸ்.பி. உதயசூரியன் ஆகியோர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இறப்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும், நிவாரண தொகை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களது போராட்டத்தினை கைவிட்டனர்.

  • Keerthy Suresh new glamorous look தாலியுடன் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 5352

    0

    0