மலையோடு மோதுகிறோம்… கூழாங்கல்லுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்ல ; பாஜக கூட்டணி மீது கிருஷ்ணசாமி ஆவேசம்

Author: Babu Lakshmanan
21 March 2024, 7:51 pm

மலையோடு மோதிக் கொண்டிருக்கிறோம், கூழாங்கல்லுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று பாஜக கூட்டணி குறித்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ண சாமி பதில் அளித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் புதிய தமிழகம் அங்கம் பெற்றுள்ளதாகவும், அதில் தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் புதிய தமிழக கட்சி போட்டியிட இருப்பதாகவும் கூறினார்.

புதிய தமிழகம் கட்சி துவங்கப்பட்டு 28 ஆண்டுகள் துவங்க இருப்பதாகவும், அதற்காக விழா கொண்டாட இருப்பதாக அவர் குறிப்பிட்டார். பிப்ரவரி மாதத்தில் தேர்தல் ஆணையத்திடம் டிவி சின்னம் கேட்டு விண்ணப்பித்ததாகவும், ஆனால் தேர்தல் ஆணையம் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்ற காரணத்தினால், டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாகும், அதில் சின்னம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டு இருப்பதாகவும், இன்னும் ஓரிரு நாளில் டிவி சின்னம் வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

தேர்தல் ஆணையம் பாகுபாடு காட்டுவதாகவும், பாஜக கூட்டணி உள்ள கட்சிகளுக்கு உடனடியாக சின்னம் ஒதுக்குவதாகவும், தேர்தல் ஆணையம் வழங்கும் சின்னத்தில் புதிய தமிழக கட்சி போட்டியிடும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த முறை தேர்தல் நியாயமாக நடைபெறும் என்று நம்புவதாகவும் , தமிழ்நாட்டில் மூன்று முறை போட்டியாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக தலைமையில் உள்ள கூட்டணி கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் நிச்சயம் வெற்றி பெற முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சங்கரன்கோவில் பகுதியில் மூன்று காவலர்கள் ஒன்று சேர்ந்து ஒரு வேன் டிரைவரை தாக்கி கொலை செய்திருப்பதாகவும், அவர்களின் மீது இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை, எஃப் ஐ ஆர் கூட பதிவு செய்யப்படவில்லை, இதற்கு தமிழக அரசு பதில் சொல்ல வேண்டும், சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக் கூறினார்.

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் தென்காசி தொகுதியில் கிருஷ்ணசாமி போட்டியிட்டால் அவர் ஒரு சுயாட்சி வேட்பாளராகவே கருதுவேன் என்று கூறிய கருத்திற்கு பதில் அளிக்கும் வகையில், மலையோடு மோதிக் கொண்டிருக்கிறோம், கூழாங்கல்லுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என அவர் கூறியுள்ளார்.

திருச்சியில் வரும் 24ஆம் தேதி மாநாட்டின் மூலம் தென்காசி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை அறிவிப்போம் என்றும், அன்றைய தினம் திமுக தேர்தல் வாக்குறுதி என்ன செய்துள்ளது, எவை செய்யவில்லை என்பதை குறித்து பட்டியலிட்டு கூற இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக பாஜக கூட்டணியில் இருந்தால் இன்று அமலாக்கத்துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தி இருக்காது, அமலாக்கத்துறை அரசியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகுவதாக அவர் விமர்சனம் செய்துள்ளார்.

  • vadivelu trying to hit the car of goundamani and senthil car கவுண்டமணியின் காரை இடிக்க வந்த வடிவேலுவின் கார்! இப்படியெல்லாம் நடந்துருக்கா?