ஊத்தங்கரையை உலுக்கிய கனமழை.. ஏரிகளில் வெள்ளம்.. ஸ்தம்பித்த போக்குவரத்து
Author: Hariharasudhan2 December 2024, 10:43 am
கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை பகுதியில் பெய்த வரலாறு காணாத மழையால், கார் உள்ளிட்ட வாகனங்கள் ஏரி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் வீடியோ வைரலாகி வருகிறது.
கிருஷ்ணகிரி: தெற்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஃபெஞ்சல் புயல் நேற்று முன்தினம் (நவ.30) இரவு புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. இதன் காரணமாக, விழுப்புரம், திருவண்ணாமலை, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் நேற்று காலை முதலே விட்டுவிட்டு மழை பெய்து.
பின்னர், பிற்பகலில் இருந்து இன்று காலை வரை இடைவிடாத கனமழை பெய்த நிலையில், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழக்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஊத்தங்கரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மட்டும் இன்று (டிச.2) காலை 7 மணி நிலவரப்படி, 50 செ.மீ (503 மி.மீ) மழை பெய்துள்ளது. இதனால் ஊத்தங்கரையைச் சுற்றியுள்ள ஏரிகள் நிரம்பி, உபரி நீர் நகருக்குள் புகுந்துள்ளது. மேலும், ஊத்தங்கரை – திருப்பத்தூர் சாலையில் உள்ள பரசனேரி நிரம்பி வெளியேறிய உபரிநீரால், அந்த ஏரியின் கரையோரம் வாடகைக்காக நிறுத்தப்பட்டிருந்த கார், மினிவேன்கள் உள்ளிட்டவை தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன.

இதனால் அந்தச் சாலையில் போக்குவரத்து முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், ஊத்தங்கரை அண்ணாநகர், காமராஜர் நகர் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியுள்ளதால், பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளிவர முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: திருவண்ணாமலை மண்சரிவு.. 7 பேரின் நிலை என்ன? தொடர் மீட்புப்பணி!
மேலும், திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை அதன் முழுக் கொள்ளளவை எட்டி உள்ளது. இதனால் அணைக்கு வரும் 1 லட்சத்து 68 ஆயிரம் கன அடி நீர் அப்படியே தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படுவதால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்படுவதால் தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்கள் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.