மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு அநீதி … தமிழக அரசுக்கு எதிராக மாபெரும் உண்ணாவிரதப்போராட்டம் ; கிருஷ்ணசாமி அறிவிப்பு
Author: Babu Lakshmanan29 August 2023, 10:03 am
மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளுக்காக வருகிற செப்டம்பர் 3வது வாரத்தில் நெல்லையில் உண்ணாவிரதப் போராட்டம் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது:- நெல்லை மணிமுத்தாறு சோதனை சாவடியில் இருந்து சுமார் 39 கிலோ மீட்டர் தூரமுள்ள மாஞ்சோலை எஸ்டேட் பகுதியில் உள்ள ஊத்து வரை உள்ள சாலைகளை உடனடியாக செப்பனிட வேண்டும். இதற்கு மாநில அரசு உடனடியாக நிதி ஒதுக்கிட வேண்டும். மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களிடம் மணிமுத்தாறு பேரூராட்சி மூலம் தொழில் வரி வசூலிக்கப்படுகிறது. தேயிலை தோட்டம் என்பது விவசாயம் சார்ந்த தொழில்.
எனவே, அந்த விவசாயிகளுக்கு தொழில் வரி விதிப்பதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். மாஞ்சோலை எஸ்டேட் பகுதியில் பள்ளி மாணவ- மாணவிகளின் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக உடனடியாக 4g வசதி உடைய இணையதள வசதி அங்கு அமைக்கப்பட வேண்டும். மாஞ்சோலை எஸ்டேட் பகுதிகளுக்கு செல்லும் ஊழியர்களின் உறவினர்களுக்கும், கட்சி பணிகள் ஆற்றுவதற்கு செல்பவர்கள் இடமும் வனத்துறையினர் கட்டணம் வசூலிப்பதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் வருகிற செப்டம்பர் மூன்றாவது வாரத்தில் நெல்லையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக புதிய தமிழக கட்சியின் தலைவர் டாக்டர் .கிருஷ்ணசாமி நெல்லையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.