‘விஜயின் பக்குவம்’… தட்டிக் கொடுக்கும் அதிமுக.. தட்டித் தூக்குமா தவெக?
Author: Hariharasudhan17 January 2025, 6:47 pm
விஜய் பக்குவப்பட்ட அரசியல்வாதியாகத் தெரிகிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறியிருப்பது மீண்டும் கூட்டணி கேள்வியை அரசியல் மேடையில் எழுப்பியுள்ளது.
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில், அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, “திமுகவின் அடக்குமுறை மற்றும் ஆணவ அரசியலை எதிர்த்து விஜய் கட்சி தொடங்கி உள்ளார். விஜயின் நிதானத்தை பார்க்கும் போது, பக்குவப்பட்ட அரசியல்வாதியாகத் தெரிகிறார். புதிதாக கட்சி தொடங்கிய விஜய் உள்ளிட்டோரும் திமுகவை விமர்சிப்பது அதிமுகவுக்கு பலம்தான்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, எம்ஜிஆர் பிறந்தநாளையொட்டி தவெக தலைவர் விஜய் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், “அளவற்ற வறுமையைத் தாண்டினார். கூத்தாடி என்ற கூற்றைச்
சுக்குநூறாக உடைத்து, தமிழக அரசியல் வரலாற்றின் மையம் ஆனார். அசைக்க முடியாத வெற்றியாளர் ஆனார். அவரே தமிழக அரசியலின் அதிசயம் ஆனார். இறந்தும் வாழும், புரட்சித் தலைவருக்குப் பிறந்தநாள் வணக்கம்” எனக் குறிப்பிட்டு இருந்தார்.
முன்னதாக, கடந்த 2023ஆம் ஆண்டு பிப்ரவரியில் கட்சி தொடங்கிய நடிகர் விஜய், அதே ஆண்டு அக்டோபரில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டை விழுப்புரத்தில் நடத்தினார். அதில், திமுகவை தனது அரசியல் எதிரி என்றும், பாஜகவை தங்களது கொள்கை எதிரி என்றும் விஜய் அறிவித்தார்.
இதையும் படிங்க: ’நாதக உடன் போட்டியெல்லாம் காலக்கொடுமை’.. திமுக வேட்பாளர் பரபரப்பு பேச்சு!
அதேநேரம், சினிமாத் துறையினரின் அரசியல் வருகை குறித்து பேசிய விஜய், எம்.ஜி.ஆரை மேற்கோள் காட்டியது மட்டுமல்லாமல், அதிமுக குறித்த எந்தவொரு விமர்சனத்தையும் முன்வைக்கவில்லை. ஆனால், தவெக உடன் அதிமுக கூட்டணி என்ற தகவலுக்கு, அப்படி எந்தவொரு கூட்டணியும் இல்லை என இரு தரப்பும் தெரிவித்திருந்தது.
ஆனால், தேர்தல் வரும்போது கூட்டணி குறித்து பேசலாம் என அதிமுக பச்சை சிக்னலைக் காட்டியிருந்தது. இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சரின் இந்த அரசியல் பேச்சு, மீண்டும் அதிமுக – தவெக கூட்டணிக்கு அஸ்திவாரமா என்ற கேள்வியை அரசியல் நோக்கர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.