17 ஆண்டுகளுக்குப் பிறகு பழனி மலைக்கோவிலில் கும்பாபிஷேக விழா.. தேதியை அறிவித்து பக்தர்களுக்கான கட்டுப்பாடுகள் வெளியீடு..!!

Author: Babu Lakshmanan
16 December 2022, 8:54 am

திண்டுக்கல் ; பழனி மலைக்கோவில் கும்பாபிஷேக விழா வருகிற ஜனவரி மாதம் 27ம் தேதி அன்று நடைபெறும் என அறங்காவலர் குழுவினர் அறிவித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். பழனி மலைக்கோவில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் கடந்த 2006ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு 12 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற வேண்டிய கும்பாபிஷேகம் நடக்காததால் பக்தர்கள் அதிருப்தி அடைந்தனர்.

Palani- Updatenews360

தொடர்ந்து, கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும் என பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகப் பணிகள் துவங்குவதற்காக பாலாலயம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, கோவிலில் கோபுரங்கள் மற்றும் சேதம் அடைந்த கோபுரங்கள், சிலைகள் பதுமைகள் ஆகியவை சீரமைக்கும் பணி நடந்து வந்த நிலையில், பழனி கோவில் கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி 27ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் 9.30 மணிக்குள் நடைபெறும் என பழனி கோவில் அறங்காவலர் குழுவினர் அறிவித்துள்ளனர்.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வருகிற டிசம்பர் 25ம் தேதி முகூர்த்த கால் நிகழ்ச்சியும், ஜனவரி 18ம் தேதி அன்று பூர்வாங்க பூஜைகள் மற்றும் கணபதி பூஜையுடன் தொடங்கி 8 கால யாகசாலை பூஜைகளுடன் துவங்கும் கும்பாபிஷேக விழா நடைபெற்று, மலைக்கோவிலில் அமைந்துள்ள பரிவார தெய்வங்களுக்கு ஜனவரி 26ம் தேதி கும்பாபிஷேகமும், பழனி கோவில் மூலவர் மற்றும் தங்க விமானம் ஆகியவற்றிற்கு ஜனவரி 27ம் தேதி வெள்ளிக்கிழமையும் கும்பாபிஷேகம் நடைபெறும் என திருக்கோவில் அறங்காவலர் குழுவினர் அறிவித்துள்ளனர்.

மேலும், கும்பாபிஷேகப் பணிகளுக்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் துரித வேகத்தில் நடைபெற்று வருவதாகவும். மலைக்கோவில் கும்பாபிஷேகத்தின் போது குறிப்பிட்ட அளவிலான பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.

கும்பாபிஷேகம் நிறைவடைந்து மூன்று நாட்கள் நடைபெறும் மண்டல பூஜையை தொடர்ந்து தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், உறுப்பினர்கள் சுப்பிரமணியன், மணிமாறன், ராஜசேகரன், சத்யா, திருக்கோவில் இணை ஆணையர் நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • monalisa viral girl soon get chance to act in serial பட வாய்ப்பு பறிபோனால் என்ன?… வைரல் பெண் மோனலிசாவுக்கு வந்த திடீர் வாய்ப்பு?