ராஜினாமா செய்த குஷ்பு: யாரும் அழுத்தம் தரவில்லை: இது என் சொந்த முடிவு: பிளீஸ் பணியாற்ற விடுங்கள் என வேண்டுகோள்…!!

Author: Sudha
15 August 2024, 12:04 pm

பிரபல நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பு கடந்த 2010ஆம் ஆண்டு திமுக வில் இணைந்து பணியாற்றினார். 2014ஆம் ஆண்டு அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதன் பின்னர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி 2020ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார்.

அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இருப்பினும் குஷ்புவிற்கு பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு (2023) பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி குஷ்பு தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “அரசியலில் 14 ஆண்டுகால அர்ப்பணிப்புக்கு பிறகு, இன்று ஒரு இதயபூர்வமான மாற்றத்தை உணர்கிறேன். நமது உயர்ந்த கட்சியான பாஜகவில் முழுமையாக சேவை செய்வதற்காக தேசிய மகளிர் ஆணையத்திலிருந்து ராஜினாமா செய்துவிட்டேன்.எப்போதும் பாஜக உடன்தான் இருக்கும். இப்போது, நான் மீண்டும் தீவிர அரசியலுக்கு வந்துவிட்டேன். முன்னெப்போதும் இல்லாத உற்சாகத்துடன் பணியாற்றுவேன்.

தேசிய மகளிர் ஆணையத்தில் அதற்கென சில கட்டுப்பாடுகள் இருந்தன. ஆனால் இப்போது நான் சுதந்திரமாக முழுமனதுடன் சேவையாற்ற முடியும்.

என்னுடைய இந்த இடைவெளி, பிரதமரின் தொலைநோக்கு திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கான எனது தீர்மானத்தை வலுப்படுத்தியுள்ளது.

வதந்தி பரப்புபவர்கள் அமைதியாக உறங்கலாம். என்னுடைய இந்த மறுவருகை நேர்மையானது. கட்சி மீதும் மக்கள் மீதும் நான் கொண்ட அசைக்க முடியாத அன்பின் காரணமாக இது நிகழ்ந்தது” இவ்வாறு குஷ்பு பதிவிட்டுள்ளார்.

  • Rape with the actress in the shooting.. Attempt to commit suicide படப்பிடிப்பில் நடிகையிடம் அத்துமீறல்.. தற்கொலை செய்ய முயற்சி : இயக்குநரின் காம முகம்!