கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி கூலித் தொழிலாளி பலி : நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என குற்றச்சாட்டு!!
Author: Udayachandran RadhaKrishnan12 July 2022, 9:42 pm
திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் கூலித் தொழிலாளி விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் புது கும்மிடிப்பூண்டி ஊராட்சி கரும்புகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஷ் (26). ஓட்டுனரான இவர் வேலை கிடைக்காத காரணத்தால் சில நேரங்களில் கிடைக்கும் வேலையை செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
தொடர்ந்து சிப்காட் தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் ஸ்வான் என்டர்பிரைசஸ் எனும் தனியார் தொழிற்சாலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது தொழிற்சாலைக்கு வெளியே உள்ள கழிவு நீர் தொட்டியின் இணைப்பை முதலில் சுத்தம் செய்யுமாறு தொழிற்சாலை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து கழிவு நீர் தொட்டியின் இணைப்பை சுத்தம் செய்து கொண்டிருந்த ஹரிஷ் திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார். அவரை மீட்ட தொழிற்சாலை நிர்வாகத்தினர் கும்மிடி பூண்டி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஹரிஷின் உடலை பொன்னேரி அரசு பொதுமருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு சிப்காட் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தனியார் நிறுவன நிர்வாகிகளிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த ஹரிஷ்க்கு செல்வி என்கிற மனைவி மற்றும் ஜனதா 3 என்ற மகள் உள்ளது குறிப்பிடதக்கது.