ஆடி மாதம் கடைசி வெள்ளி… 5 டன் காய்கறிகளில் தேசியக்கொடி அலங்காரம் : அம்மன் கோவிலில் வைத்து சிறப்பு வழிபாடு!!
Author: Udayachandran RadhaKrishnan12 August 2022, 5:57 pm
ஆடி மாதம் கடைசி வெள்ளியை முன்னிட்டு கோவை கடைவீதி மாகாளியம்மன் திருக்கோவிலில் 5 டன் காய்கறியில் தேசியக்கொடி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம் என்பது ஐதீகம். அந்த மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்டால் எண்ணியவை ஈடேறும்.
இந்த நிலையில் கோவை பெரியகடை வீதி பகுதியிலுள்ள அருள்மிகு மாகாளியம்மன் திருக்கோவிலில் ஒவ்வொரு ஆடி வெள்ளி கிழமையும் சிறப்பான அலங்கார வழிபாடு நடத்தப்பட்டு வரும் நிலையில் இன்று ஆடி மாத கடைசி வெள்ளி என்பதால் சுமார் 5 டன் எடையிலான காய்கறி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
திருக்கோவில் முன்பாக காய்கறிகளால் தேசிய கொடிகம்பம் அமைக்கப்பட்டு தேசிய கொடி வடிவமைக்கப்பட்டிருந்தது. அதேபோல் கோவில் வளாகம் முழுவதும் தேசிய கொடி அமைப்பை போன்று மூவர்ணத்தில் அசோக சக்கரத்துடனான அலங்காரம் செய்யப்பட்டதுடன் அம்மனுக்கும் காய்கறிகளால் சிறப்பான தோற்றத்தில் தேசிய கொடி மாதிரி அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
அருள்மிகு மாகாளியமம்மனை வழிபட்டு சென்றால் நினைத்த காரியங்கள் நிறைவேறும் எனவும் அனைத்து துன்பங்களும் நீங்கும் என்றும் கூறிய பக்தர்கள் ஆடி வெள்ளி கிழமைகளில் இங்கு அம்மனுக்கு செய்யப்படும் அலங்காரத்தை காண்பதற்காகவே தாங்கள் ஒவ்வொரு ஆண்டும் வருகை புரிவதாகவும் தெரிவித்தனர்.