நாளை மறுநாள் கூடும் சட்டப்பேரவை.. கர்நாடகாவை வலியுறுத்தி தனித்தீர்மானம் கொண்டு வர முடிவு!!
Author: Udayachandran RadhaKrishnan7 October 2023, 9:43 pm
நாளை மறுநாள் கூடும் சட்டப்பேரவை.. கர்நாடகாவை வலியுறுத்த தனித்தீர்மானம் கொண்டு வர முடிவு!!
தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்போதைய நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து அரசு துறைகளின் மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று நிறைவேற்றப்பட்டன.
அந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 21ஆம் தேதி நிறைவடைந்து, சட்டசபை நிகழ்வுகள் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டன. சட்டசபை 6 மாத கால இடைவெளிக்குள் கூட்டப்பட வேண்டும்.
அதன்படி சட்டசபை வரும் அக்டோபர் 9ஆம் தேதி காலை 9 மணிக்கு கூட உள்ளதாக சட்டசபை சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். பரபரப்பான அரசியல் சூழலில், தமிழக சட்டப்பேரவை கூட உள்ளது.
இதனிடையே, சட்டப்பேரவையின் கூட்டத்தொடரின் முதல் நாளான வரும் 9 ஆம் தேதி முதல்வர் மு.க ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வர உள்ளார்.
காவிரி விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வர இருக்கிறார். காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை கர்நாடக அரசு நிறைவேற்ற வேண்டும் என தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.
கர்நாடகா மற்றும் மத்திய அரசை வலியுறுத்தும் விதமாக தீர்மானத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் கொண்டு வர உள்ளதாக கூறப்படுகிறது. திங்களன்று சட்டப்பேரவை கூடியதும் அனைத்துக் கட்சி ஆதரவுடன் தீர்மானத்தை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
0
0