கோவையில் பிடிபட்ட சிறுத்தை டாப்சிலிப் வனப்பகுதிக்குள் விடப்பட்டது: சீறிப்பாய்ந்த சிறுத்தையின் வீடியோ!!
Author: Rajesh22 January 2022, 3:59 pm
கோவை: கோவையில் பிடிபட்ட சிறுத்தை டாப்சிலிப் அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டுள்ளது.
கோவை அருகே மதுக்கரை வனச்சரகத்துக்குட்பட்ட பிள்ளையார்புரம், கோவைப்புதூர், குனியமுத்தூர், பி.கே.புதூர், சுகுணாபுரம் உள்ளிட்ட பகுதியில் கடந்த ஒரு மாதமாக குடியிருப்புகள் அருகே சிறுத்தை ஒன்று புகுந்து நாய்களை அடித்துக் கொன்று அச்சுறுத்தி வந்தது.
இதனால் அப்பகுதி பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். இதற்காக சிறுத்தையை தேடி வந்தனர்.
அப்போது பி.கே. புதூரில் உள்ள தனியார் குடோனுக்குள் சிறுத்தை புகுந்து உள்ளதை கண்டறிந்தனர். இதையடுத்து தீயணைப்புத்துறையினர் உதவியுடன் தனியார் குடோனில் இறைச்சி மற்றும் தண்ணீர் சேவல், கோழியுடன் கூடிய கூண்டு அமைத்து கண்காணிப்பு கேமரா மூலம் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
கடந்த 5 நாட்களாக வனத்துறையினருக்கு போக்கு காட்டி வந்த சிறுத்தை நேற்று நள்ளிரவு 12.15 மணியளவில் கூண்டில் சிக்கியது. அப்போது இரண்டு முறை கூண்டுக்குள் சென்று திரும்பிய நிலையில் 3வது முறையாக சென்றபோது அகப்பட்டது.
சிறுத்தை கூண்டுக்குள் சிக்கியது குடோனில் வனத்துறையினர் வைத்திருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. சிறுத்தை பிடிப்பட்டுள்ளதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர். இந்நிலையில், கூண்டில் சிக்கிய சிறுத்தையை மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் வனத்துறையினர் தற்போது அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர். கோவை டாப்சிலிப் வனப்பகுதியில் சிறுத்தையை வனத்துறையினர் விட்டனர்.
கூண்டில் இருந்து திறந்துவிடப்பட்ட சிறுத்தை அடந்த காட்டிற்குள் சீறிப்பாய்ந்து ஓடியது. இதை வனத்துறையினர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். அந்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.