வனத்துறை வைத்த கூண்டில் வசமாக சிக்கிய சிறுத்தை : அச்சத்தில் இருந்த கிராம மக்கள் நிம்மதி பெருமூச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
8 August 2022, 11:48 am

ஈரோடு : சத்தியமங்கலம் அருகே தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி வந்த சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் புகும் சிறுத்தைகள் அங்குள்ள கால்நடைகளை வேட்டையாடி கடந்த சில நாட்களாக கிராமவாசிகளை அச்சத்தில் ஆழ்த்தி வந்தது.

இந்த நிலையில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு பவானிசாகர் வனத்துறையினர் புதுப்பீர்கடவு கிராமத்தில் குப்புசாமி என்பவரது தோட்டத்தில் கால்நடைகளை வேட்டையாடி வந்த சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்து அதில் ஆடு ஒன்றைக் கட்டி வைத்து கண்காணித்து வந்தனர்.

இன்று அதிகாலை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கி இருப்பது கிராம மக்களுக்கு தெரியவந்தது. அதனை வனத்துறையினருக்கு தெரிவித்தனர்.

உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் கூண்டில் சிக்கிய சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதியில் விட முடிவு செய்து அதனை தற்பொழுது காராச்சிகொரை கிராமத்தில் உள்ள வன கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

பிடிபட்ட சிறுத்தையை இன்று இரவு நீலகிரி மாவட்டம் தெங்குமரஹாடா கிராமத்தை ஒட்டியுள்ள மங்களப்பட்டி என்ற அடர்ந்த வனப்பகுதியில் விட முடிவு செய்துள்ளனர். பிடிபட்ட சிறுத்தைக்கு ஐந்து வயது இருக்கும் எனவும் அது ஆண் சிறுத்தை எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி வந்த சிறுத்தை கூண்டில் சிக்கி இருப்பது புதுப்பீர்கடவு, காராச்சிகொரை கிராம மக்களை நிம்மதியில் ஆழ்த்தியுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 677

    0

    0