வேலூர் மத்திய சிறையில் இருந்து ஆயுள் கைதி தப்பியோட்டம்… தேடுதல் வேட்டையில் போலீசார்…
Author: kavin kumar21 February 2022, 5:57 pm
வேலூர் : வேலூரில் மத்திய சிறையில் இருந்து ஆயுள் தண்டனை கைதி தப்பியோடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அவரை தேடும் பணியில் மத்திய சிறை காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கீழ் வெட்டுவானம் பகுதியை சேர்ந்தவர் நந்தா (எ) முத்துக்குமார். இவர் பணத்துக்காக அதே பகுதியை சேர்ந்த ஒருவரை கடந்த 2018-ம் ஆண்டு கொலை செய்த வழக்கில் பள்ளிகொண்டா காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு வழக்கு பதியப்பட்ட நிலையில், 2019-ம் ஆண்டு இவருக்கு வேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் மூலம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து நந்தா (எ) முத்துகுமார் 2019-ம் ஆண்டு முதல் வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை பெற்று வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை மத்திய சிறைக்கு எதிரே உள்ள சிறைதுறைக்கு சொந்தமான கட்டிடத்தை மீட்டிங் வளாகமாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சுத்தம் செய்யும் பணியில் சிறையில் உள்ள ஆயுள் தண்டறை கைதிகள் 21 பேரை ஈடுபடுத்தியுள்ளனர். மத்திய உணவு இடைவேளையின் போது காவலர்கள் எண்ணிப்பார்க்கும் போது 20 பேர் மட்டுமே இருந்துள்ளனர். 21வது நபரான நந்தா (எ) முத்துக்குமார் காணவில்லை என தெரியவந்தது. அங்குள்ள சுற்றுவட்டார பகுதியில் தேடியும் நந்தா கிடைக்காததால் அவர் தப்பியிருக்கலாம் என்ற கோணத்தில் சிறை காவலர்கள் அவரை தேடி வருகின்றனர். மேலும் தப்பியோடிய கைதி நந்தா (எ) நந்தகுமாருடன் இருந்த சக கைதிகள் 20 பேரிடம் சிறை காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.