குச்சி ஐஸ் விற்பது போல நாடகம்.. ஐஸ் பெட்டிக்குள் திறந்து பார்த்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

Author: Babu Lakshmanan
14 September 2023, 5:26 pm

நாகை அருகே ஐஸ் பெட்டிக்குள் வைத்து குச்சி ஐஸ் விற்பது போல், நடமாடும் சரக்கு வியாபாரம் செய்த நபரை போலீசார் கைது செய்தனர்

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து மது பாட்டில்கள் மற்றும் சாராயம் கடத்தி வரப்பட்டு நாகப்பட்டினம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் உத்தரவின் பேரில், வெளி மாநில மதுப்பாட்டில்கள் கடத்தல் மற்றும் சாராய விற்பனையை தடுக்க பல்வேறு இடங்களில் சார்பில் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இதனால் மது பாட்டில் கடத்துபவர்களும், விற்பனை செய்பவர்களும் பல்வேறு நூதன யுக்திகளை கையாண்டு மது பாட்டில்கள் கடத்தி விற்பனை செய்து வருகின்றனர்.

அந்த வகையில், நாகை மாவட்டம் திட்டச்சேரி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட TR பட்டினம் சாலையில் நாகப்பட்டினம் வெளிப்பாளையம் சுனாமி குடியிருப்பு பகுதுயைச் சேர்ந்த ஃபாதர் வெள்ளை என்பவர் இருசக்கர வாகனத்தில் ஐஸ் வியாபாரம் செய்வது போல், ஐஸ் பெட்டிக்குள் வைத்து, புதுச்சேரி மாநில 90 ml அளவுகொண்ட மதுப்பாட்டில்களை கடத்தி வந்து நூதன முறையில் விற்பனை செய்துள்ளார்.

அந்த பகுதியில் போலீசாரின் வாகன சோதனையின் போது நடமாடும் சரக்கு வியாபாரத்தில் ஈடுபட்ட சரக்கு வியாபாரி பாதர் வெள்ளை என்பவரை கைது செய்த போலீசார், அவர் வைத்திருந்த ஐஸ் பெட்டிக்குள் இருந்து சுமார் 400 பாண்டிச்சேரி மது பாட்டில்களையும், இருச்சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கால்நடைகளுக்கு இலை தளைகள் கொண்டு போவது போல், வேப்பிலை கிளைகளுக்குள் மது பாட்டில்களை வைத்து கடத்தி சென்றவரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!