‘குவாட்டர் 140 ரூபா.. குடிச்சா குடி, இல்லாட்டி கிளம்பு’ ; கூடுதல் விலைக்கு மதுவிற்பனை… சரக்கு வாங்க வந்தவரிடம் பார் நடத்துபவர் மிரட்டல்!!
Author: Babu Lakshmanan17 ஏப்ரல் 2023, 3:39 மணி
பள்ளிபாளையம் ஜீவா செட் டாஸ்மாக் கடையில் குவாட்டருக்கு பாட்டில் ஒன்றுக்கு அரசு நிர்ணயித்த அதிகபட்ச விலையை விட பத்து ரூபாய் வரை கூடுதல் விலை கொடுத்து தான் வாங்க வேண்டும் என்று மது குடிப்போரை பார் நடந்துபவர் மிரட்டும் வீடியோ காட்சிகள் வைரலாக பரவி வருகின்றன.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுகா பள்ளிபாளையம் ஜீவா செட் பகுதியில் உள்ள அரசு மதுபான கடையில் அரசு நிர்ணயித்த அதிகபட்ச விலையை விட ஒரு குவாட்டர் பாட்டலுக்கு 10 ரூபாய் அதிகமாக வசூல் செய்வதாகவும், மேலும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் திருச்செங்கோடு பள்ளிபாளையம் பகுதிகளில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் இதே நிலைதான் நிலவுவதாக கூறப்படுகிறது.
விலை குறித்து கேட்டால் விருப்பமிருந்தால் வாங்கவும், இல்லை என்றால் வேறு எங்கு வேண்டுமானாலும் சென்று வாங்கிக் கொள்ளுமாறு மதுகுடிப்போரை அலைக்கழிப்பதாகவும் மிரட்டி விற்பனை செய்வதாகவும் குற்றம்சாட்டுகின்றனர். டாஸ்மாக் கடைகள் அருகே உள்ள பார்களில் அமோகமாக மது விற்பனை 24 மணி நேரமும் சீரும் சிறப்புமாக செவ்வனே நடைபெற்று வருகிறது. அதுவும் பாட்டிலுக்கு ஐம்பது ரூபாய் முதல் 200 வரை கூடுதல் விலைகளில் விற்கப்படுகிறது.
ஒரு நாளைக்கு மறைமுகமாக முப்பதாயிரம் முதல் ஒரு லட்சம் வரை இந்த கூடுதல் கட்டணத்தில் பார் நடத்துபவர்கள் வருமானம் ஈட்டுவதாகவும், அங்கு விற்கப்படும் மதுபானத்தின் விலை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விஷயங்கள் அனைத்தும் தெரிந்தும் பெரிதும் நடவடிக்கை எடுப்பதில்லை எனவும், ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மனதில் கொண்டு அரசு பொறுப்பேற்று நடத்தும் டாஸ்மாக்கில் நடைபெற்று வரும் இதுபோன்ற கொள்ளை சம்பவங்களை உடனடியாக சீர் செய்ய வேண்டும்.
சட்டத்திற்கு புறம்பாக அதிக விலைக்கு மது விற்பனை செய்யும் பார்களுக்கு லைசென்ஸ் ரத்து செய்து, கேரள மாநிலம் போல பார்களே இல்லாத டாஸ்மாக் கடைகள் மற்றும் தமிழகத்தில் இயங்கினால், பெரும்பாலான கூலித் தொழிலாளிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
0
0