100 ஆண்டுகளுக்கு பிறகு கோவிலில் காலடி எடுத்து வைத்த பட்டியலின மக்கள் : பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சாமி தரிசனம்!
Author: Udayachandran RadhaKrishnan2 January 2023, 6:30 pm
கள்ளக்குறிச்சி அருகே பழமை வாய்ந்த வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் முதன் முறையாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தாழ்ந்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் சாமி தரிசனம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகேயுள்ள எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் இயங்கி வரும் நிலையில் ஆதிதிராவிடர் சமூக மக்கள் இல்லாமல் பிற மேல் சாதியினர் மட்டுமே வழிபாடு செய்து வந்த நிலையில் தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிட மக்களுக்கு கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற தேர் திருவிழாவின் போது தாழ்ந்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் தேர் திருவிழாவில் கலந்து கொள்ளக்கூடாது எனக்கூறி தேர்த்திருவிழா ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் அன்று முதல் இன்று வரை அக்கோயிலில் தேர்திருவிழா நடைபெறாமல் இருந்து வருகிறது.
மேலும் தாழ்ந்த சமூகத்தினர் கோயில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில் பல்வேறு முறை தாழ்ந்தப்பட்ட சமூகத்தினர் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்த நிலையில் கடந்த ஜீன் மாதம் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்த நிலையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி வட்டாட்சியர் தலைமையில் இரண்டு முறை நடைபெற்ற அமைதி கூட்டத்தில் முடிவு எட்டப்படாத நிலையில் கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா தலைமையில் கடந்த டிசம்பர் மாதம் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்ற நிலையில் ஆதிக்க சாதியினர் இருவர் மட்டுமே அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலில் அனைத்து சாதியினரும் வழிபாடு நடத்தலாம் என முடிவு எடுக்கப்பட்டது.
தொடர்ந்து கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா மற்றும் விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன் தலைமையில் 400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் அக்கிராமத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் பூஜை சாமான்களுடன் தங்கள் பகுதியிலிருந்து ஊர்வலமாக வந்து பழமையான வாய்ந்த ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
நூற்றாண்டு பழமை வாய்ந்த கோயிலில் முதன் முறையாக தாழ்ந்தப்பட்ட சமூகத்தினர் சாமி தரிசனம் செய்து மகிழ்ச்சியுடன் மனநிறைவு அளிப்பதாகவும் இதற்கு காரணமாக இருந்த தமிழக அரசு மற்றும் அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் நன்றி கூறுவதாக தெரிவித்தனர்.
கோயிலிலில் சாமி தரிசனம் செய்ததை தொடர்ந்து மீண்டும் போலீஸ் பாதுகாப்புடன் அனைவரும் வீட்டிற்கு திரும்பினார். மேலும் எந்தவிதமான அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.