அரசுப் பள்ளி மதிய உணவில் பல்லி.. வாந்தி, மயக்கத்தால் மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி!
Author: Hariharasudhan1 February 2025, 5:55 pm
தருமபுரி, அரூர் அரசுப் பள்ளியில் இன்று வழங்கப்பட்ட மதிய உணவில் பல்லி இருந்த நிலையில், மாணவிகள் சிலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது.
தருமபுரி: தருமபுரி மாவட்டம், அரூரில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த நிலையில், இந்தப் பள்ளியில் வழக்கம்போல் மதிய உணவு வழங்கப்பட்டு உள்ளது. அப்போது, இதனை முதலில் சாப்பிட்ட 8 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டு உள்ளது.
எனவே, அவர்கள் உடனடியாக அரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இதில் ஒரு மாணவிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, இது தொடர்பாக விசாரணை செய்ததில், பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவில் பல்லி கிடந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து அறிந்த வருவாய் கோட்டாட்சியர் சின்னுசுவாமி, வருவாய் ஆய்வாளர் சக்தி பிரியா மற்றும் அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்றனர்.
அங்கு சிகிச்சை பெற்று வரும் மாணவிகளைச் சந்தித்து, நலம் விசாரித்து ஆறுதல் கூறிய அவர்கள், மருத்துவர்களிடம் மாணவிகளின் உடல்நலம் குறித்து ஆலோசனை நடத்தினர். மேலும், பள்ளிக்குச் சென்ற வருவாய் கோட்டாட்சியர், அங்கு பணியாற்றும் சத்துணவு அமைப்பாளர்களிடம் விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க: அரசு மருத்துவமனை வாசலில் இளைஞர் வெட்டிக்கொலை.. சிவகங்கையில் பதற்றம்!
அது மட்டுமல்லாமல், இன்று வழங்கப்பட்ட மதிய உணவின் மாதிரியை எடுத்து, ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளதாக வருவாய் கோட்டாட்சியர் சின்னுசுவாமி கூறியுள்ளார்.