‘வங்கிக் கடன் தள்ளுபடி-னு சொன்னாங்க… நம்பி ஏமாந்துட்டேன்’ ; கட்டு கட்டாக பணத்துடன் ஆட்சியர் அலுவலகம் வந்த விவசாயி!
Author: Babu Lakshmanan10 October 2022, 10:03 pm
கையில் கட்டு கட்டாக ஏழு லட்சம் ரூபாய் பணத்துடன் ஆட்சியரை சந்திக்க வந்த நபரால் நெல்லை ஆட்சியரால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வழக்கம் போல் நடைபெறும் திங்கள்கிழமை குறைதீர்க்க கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தது ஆட்சியர் அலுவலகத்தில் நுழைவாயிலில் போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, முதியவர் ஒருவர் கையில் கட்டு கட்டாக பணத்தை எடுத்துக்கொண்டு, தான் ஆட்சியரை சந்திக்க வேண்டும் என்று கூறியதால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
விசாரணையில் அந்த நபர் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்த விவசாயி சிசில் என்பது தெரியவந்தது. இவருக்கு சொந்தமான 9 1/2 ஏக்கர் நிலம் நெல்லை மாவட்டம் திசையன்விளை மன்னார்புரம் பகுதியில் உள்ளது. இந்த நிலத்தின் ஆவணங்களை வைத்து அங்குள்ள கனரா வங்கியில் கடந்த 2005ல் 7.40 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார்.
விவசாயி சிசில் கடன் பெற்ற காலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்ததால் அப்போது அரசியல் கட்சியினர் வங்கிக் கடன் தள்ளுபடி குறித்த வாக்குறுதிகளைக் கொடுத்திருக்கின்றனர். அதனால், தனது வங்கிக் கடனும் தள்ளுபடியாகும் என்று நம்பியிருக்கிறார். அதன் காரணமாக வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தாமல் இருந்திருக்கிறார்.
வங்கிக் கடனை திருப்பிச் செலுத்த வங்கி சார்பில் அறிவிப்புகள் வந்ததால் 50,000 ரூபாய் மட்டும் திருப்பிச் செலுத்தியதாகத் தெரிகிறது. அந்த சமயத்தில் விவசாயக் கடன்கள் ரத்துச் செய்யப்பட்டதால் தனது கடனும் ரத்தாகிவிடும் என நம்பியதால் எஞ்சிய தொகையை திருப்பிச் செலுத்தவில்லை.
கடனை செலுத்த பத்து ஆண்டுகள் அவகாசம் கொடுத்தும் சிசில் கடனை முழுமையாக திருப்பி செலுத்ததால், வங்கி தரப்பில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பலமுறை நோட்டீஸ் வழங்கியும், சிசில் கடனை செலுத்தாததால் ஒரு கட்டத்தில் வட்டி இல்லாமல் வாங்கிய கடனை மட்டும் செலுத்தும்படியும் வாங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் போதிய வருமானம் இல்லாததால் கடனை செலுத்தாமல் தாமதித்து வந்துள்ளார் இதற்கிடையில் வாங்கி தரப்பில் வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவுபெற்றதை தொடர்ந்து சொத்துகளை ஏலம் விடப் போவதாக வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதை கேட்டு பதறிப் போன சுசில் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
பின்னர், வங்கியில் சென்று கேட்டபோது தங்களுக்கான கால அவகாசம் முடிந்து விட்டது. இனி தங்களால் எதுவும் செய்ய முடியாது. மண்டல அலுவலகத்தில் சென்று கேளுங்கள் என தெரிவித்துள்ளனர். தனது நிலத்தை மீட்பதற்காக சுசில் கடந்த ஒரு மாதமாக அங்கு இங்கும் அலைந்து திரிந்த நிலையில், இன்று வங்கியில் தனது நிலத்தை மாவட்ட ஆட்சியரை சந்திப்பதற்காக ஆட்சியர் அலுவலகம் வந்துள்ளார்.
அப்போது, வங்கியில் செலுத்த வேண்டிய 7 லட்சம் ரூபாய் பணத்தை ஆட்சியரிடம் கொடுத்து நிலத்தை மீட்டு தரும்படி கேட்பதற்காக கையில் கட்டு கட்டாக பணத்தை கொண்டு வந்துள்ளார். அதே சமயம், விவசாயி சிசில் இதுவரை அவர் வாங்கிய கடனுக்கு வட்டியுடன் சேர்த்து மொத்தம் 66 லட்சம் செலுத்த வேண்டியுள்ளதாகவும், பல முறை அவகாசம் கொடுத்தும் அந்த பணத்தை சுசில் செலுத்தவில்லை வட்டியை கழித்து அசல் தொகையை மட்டும் செலுத்த கூறியும் அதையும் சுசில் செலுத்தவில்லை என்றும், வங்கி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெறும் தினத்தன்று விவசாயி கையில் கட்டு கட்டாக பணத்துடன் வந்து சம்பவம் ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.