வெளியான முக்கிய அறிவிப்பு.. விஜய்க்கு காத்திருக்கும் சவால்.. திமுக, பாஜகவின் நிலைப்பாடு?
Author: Hariharasudhan25 March 2025, 4:54 pm
9 மாவட்டங்களில் உள்ள 315 காலிப் பணியிடங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதாக மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
சென்னை: சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள நான்கு வார்டுகள் மற்றும் 133 நகராட்சிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு மே மாதத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் எனவும் காஞ்சி, வேலூர், நெல்லை மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ள 315 காலிப் பணியிடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் மாநிலத் தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது காலியாக உள்ள பதவியிடங்களுக்கு தற்செயல் அல்லது இடைக்காலத் தேர்தல்களை நடத்த மாநிலத் தேர்தல் ஆணையம் ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் 4 வார்டு கவுன்சிலர்களுக்கான காலி பதவியிடங்கள் உள்பட 35 மாவட்டங்களில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் ஏற்பட்டுள்ள 133 காலிப் பதவியிடங்களுக்கும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் ஏற்பட்டுள்ள 315 காலிப் பதவியிடங்களுக்கும் தற்செயல் அல்லது இடைக்காலத் தேர்தல்களை எதிர்வரும் மே மாதத்தில் நடத்துவதற்கு தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தேசித்துள்ளது.

மாவட்ட அளவில் மேற்படி தேர்தல் முன்னேற்பாட்டுப் பணிகளை விரைந்து முடிக்க தொடர்புடைய அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தல், ஊரக, கிராமப்புறங்களில் கட்சிகளுக்கு உள்ள செல்வாக்கை சோதிக்க அரசியல் தளங்கள் பயன்படுத்துகின்றன.
அந்த வகையில், ஆளும் திமுக, அதனுடன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஐஎம், மதிமுக, தவாகா, எதிர்கட்சி வரிசையில் உள்ள அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக மற்றும் தேர்தல் களத்தில் இருக்கும் நாதக மற்றும் முதல் தேர்தலை எதிர்கொள்ளவுள்ள தவெக ஆகியவை, இந்தத் தேர்தலில் தங்களை சுயபரிசோதனை செய்யும்.
இதையும் படிங்க: போலீசிடம் சிக்கும் நடிகை ரம்பா? கஸ்டம் ஆபிசரை ஏமாற்றியதால் சர்ச்சை?
ஆனால், தவெக 2026 சட்டப்பேரவைத் தேர்தல் மட்டுமே இலக்கு என இயங்கிக் கொண்டிருப்பதால், தவெக சார்பில் வேட்பாளர்கள் களமிறக்கப்படுவார்களா என்பது சந்தேகமே. இருப்பினும், கடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்தவர்கள், விஜயின் புகைப்படத்தை வைத்தே பல இடங்களில் வெற்றி பெற்றனர் என்பதும் நினைவுகூரத்தக்கது.
எனவே, ஒருவேளை தவெக இதில் களமிறங்கத் தொடங்கினால், விஜய்க்காக ஓட்டு விழுமோ என்ற கேள்வியும் அரசியல் மேடையில் எழுந்துள்ளது. இருப்பினும், திமுக உளவுத்துறையை முடுக்கிவிட்டுள்ளதாகவும், அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் களப்பணியை துரிதப்படுத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.
