இனி லாக்கப் மரணங்கள் நிகழாது.. தவறு செய்யும் காவலர்களுக்கு இந்த ஆட்சியில் இடமில்லை : பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி!!

Author: Udayachandran RadhaKrishnan
10 May 2022, 1:14 pm

சென்னை : குழந்தைகள் மீதான குற்றத்தடுப்புகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என சட்டப்பேரவையில் முதலமைச்சர் பேசியுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், கடந்த ஓராண்டு காலத்தில் அனைத்து துறைகளும் எத்தகைய வளர்ச்சி பெற்றுள்ளது என்பதை அறிந்துள்ளீர்கள். தமிழகத்தில் வன்முறைகள் இல்லை, அராஜகங்கள் இல்லை, மத மோதல்கள், சாதி சண்டை, துப்பாக்கிசூடுகள் உள்ளிட்ட எதுவும் இல்லை. இந்தியாவிலேயே அமைதியான, பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு எனும் நற்பெயர் மீண்டும் கிடைத்துள்ளது.

குற்றங்களே நடக்காத வகையில் சூழலை உருவாக்கி தருவதே காவல்துறையினரின் பணி. காவல்துறையை யாரும் கைநீட்டி குற்றம் சொல்ல முடியாத துறையாக இருக்க வேண்டும்.

காவல்துறையினர் ஒவ்வொருவரும் விமர்சனத்திற்கு இடமில்லாமல் பணியாற்ற வேண்டும். எந்த திசையில் இருந்து சிபாரிசு வந்தாலும் சட்டத்தின் பக்கம் நின்று நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப்பொருட்கள் நடமாட்டத்தை இரும்புக்கரம் கொண்டு ஒதுக்குங்கள் என்றும் திட்டமிட்டு அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் மோதல்களை ஏற்படுத்துவோரை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

கூலிப்படைகள் முழுமையாக துடைத்தெறியப்பட வேண்டும். மதம், சாதி, வன்முறையை தூண்டும் பேச்சுக்கள் தடுக்கப்பட வேண்டும். சமூக வலைத்தளங்களில் வன்முறையை தூண்டுவோரை கண்காணிக்க வேண்டும். அங்கொன்றும், இங்கொன்றும் கூறி காவல்துறையை களங்கப்படுத்த வேண்டாம்.

சட்டம் – ஒழுங்கை நிலைநாட்டுதல், குற்றங்களை தடுக்க முன்னுரிமை காவல்துறை – மக்களுக்கு இடையே நல்லுறவை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குற்றங்கள் முன்கூட்டியே தடுக்கப்பட்டுள்ளன, அதை மீறி நடந்தாலும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். ஆய்வு கூட்டங்களை நடத்தி குற்றப்பிரிவு ஆலோசனைகளை கவலை உயரதிகாரிகள் வழங்கியிருக்கிறார்கள்.

தொழிற்சாலை பகுதிகளில் குற்றங்களை தடுக்க தனி காவல்துறை படை அமைக்கப்பட்டுள்ளது. ஓராண்டில் 268 கொலைகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி உள்ளனர். அரசு எடுத்த நடவடிக்கைகள் மூலம் திருட்டு வழக்குகளில் ரூ.144 கோடி சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன.

விநாயகர் சதுர்த்தி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின்போது சிறப்பான பாதுகாப்பு அளிக்கப்பட்டது. குன்னுர் ஹெலிகாப்டர் விபத்து மீட்பு பணிகளில் தமிழகம் முன்னின்று களப்பணி ஆற்றியுள்ளது. அதிமுக ஆட்சியில் இருந்ததைவிட கடந்த ஓராண்டில் கொலை, கொள்ளை சம்பவங்கள் குறைந்தே உள்ளன.

கூலிப்படை விரைவில் முற்றிலும் ஒழிக்கப்படும். எந்த சூழலிலும் துப்பாக்கிசூடு என்பது ஏற்கக்கூடியது அல்ல, விசாரணைக்காக அழைத்து வருபவர்களை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்த கூடாது. கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றம் வழிகாட்டுதலின்படி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்.

குழந்தைகளுக்கு எதிரான, இணையவழி குற்றங்கள் குறித்து விசாரணைக்கு முன்னுரிமை தரப்படும். அரசு எப்போதும் எதையும் மறைக்க முயல்வதில்லை, லாக்கப் மரணங்கள் இனி நிகழாது என உறுதியளிக்கிறேன்.இவ்வாறு அவர் சட்டப்பேரவையில் உரையாற்றினார்.

  • 150 நடிகைகளுடன் தனுஷ்… சரமாரியாக தாக்கும் சுசித்ரா..!
  • Views: - 820

    0

    0