பட்டப்பகலில் லாரி ஓட்டுநரை அரிவாளால் வெட்டிய கும்பல்…. முன்விரோதம் காரணமாக வெறிச்செயல் ; அதிர வைக்கும் சிசிடிவி காட்சிகள்!!
Author: Babu Lakshmanan23 May 2024, 12:44 pm
வேலூரில் முன்விரோதம் காரணமாக லாரி ஓட்டுனரை அரிவாளால் வெட்டிவிட்டு மூன்று பேர் கொண்ட கும்பல் தப்பி ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஆவின் பால் பண்ணை அருகே உள்ள மெக்கானிக் கடை ஒன்றில் தனது லாரியை பழுது பார்த்துக் கொண்டிருந்த அலமேலுமங்காபுரம் கொல்லை மேடு பகுதியை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் (33) என்பவரை, ஆட்டோவில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
அந்த கும்பல் வெட்டியபோது, தற்காத்துக் கொள்ள முத்துகிருஷ்ணன் தனது கைகளால் தடுக்க முயன்றுள்ளார். இதனால் அவருக்கு கையில் பலமாக வெட்டு விழுந்துள்ளது. இதில், முத்துகிருஷ்ணனின் விரல்கள் துண்டாகியுள்ளது. தொடர்ந்து அந்த கும்பல் வெட்டியதில், தலையில் பலத்த வெட்டு விழுந்து முத்துகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்துள்ளார்.
மேலும் படிக்க: ஜெயக்குமார் கொலை வழக்கில் விசாரணை இழுபறி… வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி உத்தரவு…!!!!
உடனே அங்கிருந்தவர்கள் சத்துவாச்சாரி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முத்துகிருஷ்ணனை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து விசாரனை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில் அலமேலுமங்காபுரம் அடுத்த ஏரியூர் பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோவில் திருவிழாவில் ஏற்பட்ட மோதலில், முன்விரோதம் காரணமாக இன்று முத்துகிருஷ்ணனை நோட்டமிட்டு அவரை சமயம் பார்த்து முன்று பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
வெட்டிவிட்டு தப்பித்து ஓடிய ஏரியூர் பகுதியை சேர்ந்த அசோக்(30), சக்திவேல் (30), சிவா (30) ஆகிய மூன்று பேர் என்பது தெரியவந்துள்ளது. அவர்களை சத்துவாச்சாரி காவல்துறையினர் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடு ரோட்டில் கும்பல் ஒன்று சரமாறியாக வெட்டிய சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.