காதலிப்பவர்கள் கட்டிப்பிடிப்பது குற்றமல்ல.. கோர்ட் அதிரடி கருத்து!
Author: Hariharasudhan15 November 2024, 6:07 pm
காதலிப்பவர்கள் கட்டிப்பிடிப்பது குற்றம் ஆகாது என உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து தெரிவித்து உள்ளார்.
மதுரை: தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தன்னை காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுத்ததாக இளம்பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்து உள்ளார். இவ்வாறு அப்பெண் அளித்த புகாரில், “காதலிக்கும் போது இளைஞர் தன்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததாக” அந்தப் பெண் குறிப்பிட்டு இருந்தார்.
அதன் அடிப்படையில், அந்த இளைஞர் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் 354ஏ பிரிவின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதனையடுத்து, தன் மீது அப்பெண் அளித்த வழக்கை ரத்து செய்யக் கோரி, அந்த இளைஞர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், இன்று இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, “வளரிளம் பருவத்தில் காதலிப்பவர்கள் கட்டிப் பிடிப்பதும், முத்தம் கொடுப்பதும் இயல்பானதாகவே பார்க்கப்படுகிறது. மனுதாரர் திருமணம் செய்ய மறுத்த குற்றச்சாட்டை அப்படியே எடுத்துக் கொண்டாலும், காதலிப்பவர்கள் கட்டிப் பிடிப்பதும், முத்தம் கொடுப்பதும் இந்தியத் தண்டனைச் சட்டம் 354 ஏ பிரிவின் கீழ் குற்றமாக அமையாது.
எனவே, அந்த இளைஞர் மீதான வழக்கை ரத்து செய்கிறேன். மேலும், இது தொடர்பாக கீழமை நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கும் ரத்து செய்யப்படுகிறது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ப்ரோமோஷனும் வேணும், பொண்ணும் வேனும்.. புதரில் கிடந்த சிறுவன்.. திருப்பூரை அலறவிட்ட சம்பவம்!
முன்னதாக, சிறார் ஆபாசப் படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றம் ஆகாது என ஏற்கனவே நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அளித்த தீர்ப்பு, உச்ச நீதிமன்ற கண்டனத்திற்கு உள்ளாகி ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.