வீட்டின் முன்பு நிறுத்தப்பட்ட சொகுசு காரில் திடீர் தீ.. முற்றிலும் எரிந்து சேதம் : மர்மநபர்கள் சதியா என போலீசார் விசாரணை!!
Author: Udayachandran RadhaKrishnan13 February 2022, 7:53 pm
விழுப்புரம் : வீட்டின் முன்பு நின்று இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் தக்கா தெருவைச் சேர்ந்தவர் விஜய் கார்த்திக் (வயது 27). காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனது சொகுசு காரை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார். இந்நிலையில் இன்று காரின் முன்பக்கம் திடீரென புகை கிளம்பி தீப்பற்றி உள்ளது.
இதனால், அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ கொளுந்து விட்டு எரிந்ததால் அணைக்க முடியவில்லை.
உடனே இது குறித்து விழுப்புரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் முழுவதும் சேதமடைந்தது.
இது குறித்து விழுப்புரம் மேற்கு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.