பழுதாகும் அரசு மருத்துவமனை ஜெனரேட்டர்கள்.. மீண்டும் டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை.. இபிஎஸ் கடும் விமர்சனம்!

Author: Hariharasudhan
5 December 2024, 11:15 am

மானாமதுரையில் அரசு மருத்துவமனையில் டார்ச் லைட் வெளிச்சத்தில் நோயாளிக்கு சிகிச்சை அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள கீழப்பசலை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். ரயில்வே ஊழியரான இவரை, சொத்து தகராறு காரணமாக தங்கமணி என்பவர் தரப்பினர் அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவரை, அவரது உறவினர்கள் மானாமதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.

அப்போது அங்கு மின்சாரம் இல்லாததால், டார்ச் லைட் வெளிச்சத்தில் மருத்துவ பணியாளர்கள் முதலுதவி செய்து உள்ளனர். அது மட்டுமல்லாமல், மருத்துவர் இல்லாமல் மருத்துவ பணியாளர்களே அவருக்கு தையல் போட்டும் உள்ளனர். இது தொடர்பாக போலீசாரிடம் உறவினர்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டு உள்ளனர்.

Edappadi Palaniswami on Torch issue

இந்த நிலையில், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் டார்ச் லைட் வெளிச்சத்தில் மருத்துவர்கள் இன்றி ஊழியர்களே தலையில் தையல் போட்டு சிகிச்சை அளித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. மின்வெட்டு காலங்களில் அரசு மருத்துவமனைகள் முடங்காமல் இருக்க ஜெனரேட்டர் வசதிகளோ, எல்லா நேரங்களிலும் சிகிச்சை அளிக்க போதிய மறுத்துவர்களோ இல்லாத அவல நிலைக்கு மருத்துவத் துறையை அதள பாதாளத்தில் தள்ளியிருக்கும் விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

விடியா திமுக ஆட்சியில் முதல்வரோ, மக்கள் வெள்ளத்தில் தத்தளிப்பது குறித்த எந்த அக்கறையும் இன்றி கூட்டணி கட்சி கூட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறார்; அமைச்சரோ தனக்கொரு துறை இருப்பதையே மறந்துவிட்டு வாரிசுக்கு பிறந்தநாள் விழா எடுப்பதில் மட்டுமே முனைப்பாக இருக்கிறார்.

இதையும் படிங்க: மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்ற தவெக பெண் நிர்வாகி.. போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்!

மக்கள் பற்றிய சிந்தனையே இல்லாத விடியா திமுக ஆட்சியாளர்கள் உடனடியாக விழித்துக்கொண்டு, தங்கள் துறைசார் பணிகளை இனியாவது கவனிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில், இது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்து உள்ளார். அதில், “மானாமதுரை அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்குத் தையல் போடும் நேரத்தில் திடீர் மின் வெட்டு ஏற்பட்டது. அப்போது மருத்துவமனையில் உள்ள ஜெனரேட்டர் எதிர்பாராதவிதமாக பழுதாகிவிட்டதால் இடைப்பட்ட நேரத்தில் டார்ச் லைட் வெளிச்சத்தில் தலையில் தையல் போட்டு சிகிச்சை அளித்ததை தன்னுடைய விளம்பரத்திற்காக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்கிறார்.

எக்ஸ் தளத்தில் எழுத எதுவும் கிடைக்காதா? எனத் தினமும் ஏங்கும் ‘ஆண்ட்ராய்டு போபியோ’வந்து பழனிசாமியை ஆட்டிப் படைக்கிறது போல. எந்த சூழலிலும் அரசு மருத்துவமனைகள் செயல்பட ஜெனரேட்டர் உட்பட எல்லா முன்னேற்பாடுகளுடன்தான் அரசு மருத்துவமனைகள் திராவிட மாடல் ஆட்சியில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. காலி பணியிடங்கள் ஏற்படும் போதெல்லாம் டாக்டர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள்.

Ma subramaniam on torch issue

வரும் ஜனவரி 5-ம் தேதி கூட 2,553 டாக்டர்கள் பணியிடங்களுக்குத் தேர்வு நடைபெறுகிறது. கூட்டணிக் கட்சிகள் யாராவது வர மாட்டார்களா? என அல்லாடும் பழனிசாமிக்குக் கூட்டணிக் கட்சிக் கூட்டத்தில் திமுக பங்கேற்றால் அடி வயிறு எரியத்தானே செய்யும். துணை முதல்வர் பிறந்தநாள் கூட்டம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக நடத்த முடிவு செய்திருந்த நிலையில், ஃபெஞ்சல் புயல் பாதிப்பு ஏற்பட்டது.

உடனே அதனை மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியாக மாற்றி நடத்தினோம். அந்த நிவாரண உதவி நிகழ்ச்சியையும் கேலி செய்து பாதிக்கப்பட்ட குடும்பங்களை எள்ளி நகையாடுகிறார் எதிர்க் கட்சித் தலைவர்” எனக் கூறி உள்ளார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!