நழுவிய செந்தில் பாலாஜி.. காத்திருக்கும் ED.. பாஜக செக்!
Author: Hariharasudhan28 March 2025, 1:05 pm
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளை சேர்த்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை: போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதாகக் கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை சேர்த்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து, ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “2 ஆயிரத்துக்கும் அதிகமான குற்றம் சாட்டப்பட்டவர்கள் சேர்க்கப்பட்டுஉள்ளதால், 600க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை முடிக்க 1,500 ஆண்டுகளாகும் என்பதால் வழக்குகளை தனித்தனியாக விசாரிக்க உத்தரவிட வேண்டும்” என வாதிடப்பட்டது.
இதற்கு காவல்துறை தரப்பில், “வழக்கில் இருக்கும் குற்றச்சாட்டுக்கள் ஒரே மாதிரியானவை. வழக்குகளைச் சேர்த்து விசாரிப்பது என்பது சிறப்பு நீதிமன்றத்தின் முடிவுதான்” எனத் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில், “இந்த வழக்கை தொடர்ந்த மனுதாரர் மூன்றாம் நபர். இது வழக்கில் அரசுத் தரப்பு சாட்சி அல்ல” என வாதிடப்பட்டது.

மேலும், “வழக்குகளைத் தனித்தனியாக விசாரித்தால்தான் தாமதமாகும் என்பதால், சேர்த்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சரிதான்” எனவும் வாதிடப்பட்டது. இவ்வாறு அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, காவல்துறை தரப்பு வாதத்தை ஏற்று மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும், சமீபத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான நபர்களின் இடங்கள் ஆகியவற்றில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதன்படி, டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் அளவில் முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.
எனவே, இதனை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் எனத் தெரிவித்த செந்தில் பாலாஜி, இரவோடு இரவாக டெல்லி சென்று வந்தார். இந்த டாஸ்மாக் முறைகேடு வழக்கிற்காகவே டெல்லி சென்று வந்ததாக பேசப்பட்ட நிலையில், தமிழக அரசின் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.
இதையும் படிங்க: யாரும் இத மட்டும் பண்ணிராதீங்க..மனோஜ் இறந்ததற்கு காரணம் வேற..தம்பி ராமையா உருக்கம்.!
இதன்படி, டாஸ்மாக் முறைகேடு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த முடிச்சை அவிழ்த்து ஏற்கனவே சிறைக்கு சென்று திரும்பிய செந்தில் பாலாஜியை மீண்டும் முறைகேட்டு வழக்கின் வளையத்திற்குள் கொண்டுவர பாஜக தொடர்ந்து முயற்சிக்கும் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக, செந்தில் பாலாஜியின் கரூர் பகுதிகளில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் செல்வாக்கும் சற்று மேலோங்கி வர, மீண்டும் வந்த செந்தில் பாலாஜி அதனை திருப்ப முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளதால், செந்தில் பாலாஜி ED வளையத்திற்குள் கொண்டுவரப்படுவார் எனவும் அரசியல் மேடையில் பேச்சு எடுபடுகிறது.