இது அரசின் தோல்வி.. மதுவிலக்குப் பிரிவு என்ன செய்கிறது? – ஐகோர்ட் அதிரடி!
Author: Hariharasudhan18 December 2024, 4:02 pm
இத்தனை ஆண்டுகளாக கள்ளச்சாரய விற்பனை நடைபெறுகிறது என்றால், அதனை தடுக்காமல் மதுவிலக்குப் பிரிவு என்ன செய்துகொண்டிருக்கிறது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
சென்னை: கடந்த ஜூன் 19ஆம் தேதி, கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததில் 229 பேர் பாதிக்கப்பட்டனர். மேலும் 68 பேர் உயிரிழந்த நிலையில், 161 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்ட சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். இதன்படி, சாராயம் விற்பனை செய்தவர்கள் உள்ளிட்ட 24 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே, வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என அதிமுக, பாமக, பாஜக மற்றும் தேமுதிக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், சிபிசிஐடி நடத்திய விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதையும் படிங்க: தனித்து நின்று வெற்றி பெற்றவர்… இயக்குநர் பாலாவுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!!
ஆனால், உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்து, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் விறபனை செய்ததில் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை ரத்து செய்யக் கோரி 18 பேர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் எம். ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், “இத்தனை ஆண்டுகளாக கள்ளச்சாரய விற்பனை நடைபெறுகிறது என்றால், அதனை தடுக்காமல் மதுவிலக்குப் பிரிவு என்ன செய்துகொண்டிருக்கிறது?” என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த விவகாரத்தில் அரசின் தோல்வியையும் கவனத்தில் கொள்ள வேண்டுமென தெரிவித்தனர். இதனையடுத்து, வழக்கின் விசாரணையை ஜனவரி 6ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.