‘லைக்கா நிறுவனம்’ சார்பில் தொடரப்பட்ட வழக்கு: ‘பொன்னியின் செல்வன் 1’ திரைப்படத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!
Author: Vignesh29 September 2022, 6:15 pm
பொன்னியின் செல்வன் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகியுள்ள நிலையில், இந்த படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு போட்டுள்ளது.
இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ள நிலையில், நாளை இந்த படத்தின் முதல் பாகம் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. சோழ மன்னர்களின் வரலாற்றை, புனைந்து எழுதப்பட்ட நாவலான கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு தமிழர்கள் மத்தியில் மட்டுமின்றி உலக சினிமா ரசிகர்கள் அனைவரிடத்திலுமே நிலவி வருகிறது.
மேலும் இந்த படத்தின் பிரமோஷன் பணிகளில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக பட குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வபோது இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்யும் விதமாக பல்வேறு வீடியோக்கள் போன்றவையும் வெளியிடப்பட்டு வருகிறது. பிரமிக்க தக்க காட்சிகளுடன்… மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது.
இந்நிலையில் நாளை வெளியாகும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிடக் கூடாது என லைக்கா நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், சுமார் 20045க்கும் மேற்பட்ட இணையதளங்களில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியிட தடை விதித்து நீதிபதி எம்.சுந்தர் உத்தரவு பிறப்பித்தார்.