6 பேர் பதிலளிக்க வேண்டும்.. அண்ணா பல்கலை விவகாரத்தில் ஐகோர்ட் அதிரடி!
Author: Hariharasudhan27 December 2024, 1:32 pm
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இரண்டாம் ஆண்டு மாணவி, கடந்த டிசம்பர் 23ஆம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என பெண் வழக்கறிஞர் வரலட்சுமி சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் வி.லக்ஷ்மி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கறிஞர் வரலட்சுமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெயபிரகாஷ், கடிதத்தின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு, விசாரணையை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் எனக் கோரினார்.
அப்போது, மற்றொரு வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி ஆஜராகி, “முதல் தகவல் அறிக்கையை போலீசார் வெளியிட்டதன் காரணமாக பாதிக்கப்பட்ட பெண்ணின் ஒட்டுமொத்த குடும்பமும் பாதிக்கப்பட்டு உள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் மட்டுமல்லாமல், அனைத்து கல்வி நிறுவனங்களின் விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவிகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும்” என முறையிட்டார்.
இதனையடுத்து, தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உயர் நீதிமன்ற நீதிபதி அமர்வு தெரிவித்தது. தொடர்ந்து, இந்த வழக்கில் தமிழக உள்துறை செயலாளர், டிஜிபி, சென்னை மாநகர காவல் ஆணையர், அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், பல்கலை பதிவாளர் மற்றும் கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோரை எதிர்மனுதாரராகச் சேர்க்க உத்தரவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: “முஃபாசா த லயன் கிங்” மிரட்டலாக டப்பிங் கொடுத்துள்ள தமிழ் நடிகர்கள்..!
மேலும், இவ்வழக்கில் தமிழக அரசு மற்றும் போலீசாரின் விளக்கத்தைப் பெறாமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனவும், எனவே, இது தொடர்பாக இன்று பிற்பகல் 2.15 மணிக்கு தமிழக அரசு மற்றும் காவல்துறையினரின் விளக்கத்தைப் பெற்று தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளி வைத்தனர்.