எனக்கும் தான் பிரச்னை.. தீட்சிதர்கள் விவகாரத்தில் நீதிமன்றம் காட்டம்

Author: Hariharasudhan
19 அக்டோபர் 2024, 4:46 மணி
Quick Share

கோயிலில் காசு போட்டால் தான் பூ கிடைக்கும், இல்லையென்றால் விபூதி கூட கிடைக்காது என தீட்சிதர் சஸ்பெண்ட் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை: உலகப் புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் செவிலியரைத் தாக்கியாதாகவும், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், கனக சபையில் பக்தர்கள் தரிசனம் செய்ய உதவியதாகவும் கூறி, நடராஜ தீட்சிதர் என்பவரை சஸ்பெண்ட் செய்து பொது தீட்சிதர்கள் குழு உத்தரவிட்டது. இதனையடுத்து, இதனை எதிர்த்து நடராஜ தீட்சிதர் இந்து அறநிலையத்துறை இணை ஆணையரிடம் மேல்முறையீடு செய்துள்ளார்.

அதனை விசாரித்த கடலூர் இந்து அறநிலையத்துறை இணை ஆணையர், நடராஜ தீட்சிதரின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.பின்னர், இதனை எதிர்த்து பொது தீட்சிதர்கள் குழுவின் செயலாளர் வெங்கடேச தீட்சிதர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கின் கீழ், பொது தீட்சிதர் குழுவின் முடிவில் தலையிட இந்து சமய அறநிலையத்துறைக்கு அதிகாரம் இல்லை, எனவே, கடலூரி இணை ஆணையரின் உத்தரவை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என கோரிடப்பட்டு இருந்தது.

பின்னர், இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி எம்.தண்டபாணி முன்பு இன்று (அக்.19) விசாரணைக்கு வந்தது. அப்போது நடராஜ தீட்சிதர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பின்னர் கோயில் தங்களுக்குச் சொந்தமானது என பொது தீட்சிதர்கள் நினைக்கின்றனர். எனவே, நீதிமன்றம் தான் இதனைக் கட்டுப்படுத்த வேண்டும்” எனக் கூறினார்.

இதனையடுத்து, “தீட்சிதர்களால் எனக்கும் பிரச்சனை ஏற்பட்டது” என்றார் நீதிபதி எம்.தண்டபாணி. தொடர்ந்து பேசிய அவர், “மன கஷ்டங்களுக்காக கோயிலுக்கு வரும் பக்தர்கள் அங்கும் அவமானப்படுத்தப்படுகின்றனர். இது வேதனை அளிக்கக்கூடிய ஒன்று. தீட்சிதர்கள் ஆணவத்துடன் செயல்படுகின்றனர். இது ஒரு நல்ல அறிகுறி கிடையாது.

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வருபவர்கள் அனைவரும் சண்டைக்கு வருவது போலவே தீட்சிதர்கள் நினைக்கின்றனர். புராதனமாக விளங்கும் சிதம்பரம் நடராஜர் கோயில் நமக்குச் சொந்தமானது என பொது தீட்சிதர்கள் நினைக்கின்றனர்.

இதையும் படிங்க: திருத்தணிக்கே மொட்டை போட்ட பலே கில்லாடிகள்.. சதுரங்க வேட்டை பாணியில் நூதன மோசடி!

அவர்கள் தங்களை கடவுளுக்கு மேலானவர்கள் எனவும் கருதுகின்றனர். அதேநேரம், சிதம்பரம் நடராஜர் கோயிலில் மட்டுமே நடத்துப்பட்டு வந்த ஆருத்ரா தரிசனம், தற்போது பல கோயில்களில் நடத்தப்படுகிறது. சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனத்திற்கு முன்பைப் போல பக்தகர்கள் கூட்டம் வருவதில்லை.

இப்படியே இருந்தால் பக்தர்களுடைய வருகை குறைந்து கோயில் பாழாகிவிடும். கோயிலில் காசு போட்டால் தான் பூ கிடைக்கும், இல்லையென்றால் விபூதி கூட கிடைக்காது” எனத் தெரிவித்தார். இதனையடுத்து, இந்த வழக்கில் பதிலளிக்குமாறு இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி எம்.தண்டபாணி, விசாரணையை அக்டோபர் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

  • ரூ.411 கோடி அரசு நிலம் அபேஸ்? அறப்போர் இயக்கம் கைகாட்டும் அமைச்சர்!
  • Views: - 82

    0

    0

    மறுமொழி இடவும்