நேற்று தான் உத்தரவு போட்ட அமைச்சர்… மறுநாளே ஆவின் பால் பாக்கெட்டுகள் விநியோகம் தாமதம் ; பொதுமேலாளரின் வீட்டை முற்றுகையிட்டு முகவர்கள் போராட்டம்!!
Author: Babu Lakshmanan3 November 2022, 10:03 am
மதுரையில் பல்வேறு பகுதிகளில் ஆவின் டெப்போக்களுக்கு பால் பாக்கெட்டுகள் விநியோகம் தாமதமானதால், பொதுமேலாளரின் வீட்டை முற்றுகையிட்டு முகவர்கள் போராட்டம் நடத்தினர்.
மதுரை மாவட்ட சாத்தமங்கலம் பகுதியில் உள்ள ஆவின் நிறுவனத்திற்கு சொந்தமான பால் பண்ணை மூலமாக ஆவின் டெப்போக்கள் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாவே பால் உற்பத்தியாளர்கள் ஆவின் பால் பண்ணைக்கு, பால் குறைவாக வழங்கிவரும் நிலையில், ஆவின் பால் பாக்கெட்டுகள் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று பல்வேறு ஆவின் பால் டெப்போக்களுக்கு வழங்க வேண்டிய பால் பாக்கெட்கள் தாமதமாக விநியோகிக்கப்பட்டதாக முகவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து இன்று ஆவின் பால் பண்ணைக்கு நேரில் சென்று கேட்டபோது, அதிகாரிகள் உரிய பதில் அளிக்காத நிலையில், ஆவின் மண்டல பொதுமேலாளரின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.உரிய நேரத்தில் பால்பாக்கெட்டுகளை வழங்காத நிலையில் முகவர்களும், நுகர்வோரும் கடுமையாக பாதிப்புக்குள்ளாவதாக தெரிவித்தனர்.
பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளான பால் விலை உயர்வு, உடனடி பணம் வழங்க வேண்டும் உள்ளிட்டவற்றை நிறைவேற்றாத நிலையில், மதுரை ஆவினில் அவ்வப்போது பால் பாக்கெட்டுகள் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.
மழைக்காலங்களில் ஆவின் பால் விநியோகம் தடையின்று மேற்கொள்ள பால்வளத்துறை அமைச்சர் நாசர் நேற்று உத்தரவிட்ட நிலையில், மறுநாளே ஆவின் பால் விநியோகம் தாமதமாகியுள்ளதாக முகவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.