5 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் தொடக்கம்… இன்னும் 33 மாதங்கள் தான்… இலக்கை நிர்ணயித்து வேலை ஆரம்பம்..!!
Author: Babu Lakshmanan5 March 2024, 12:53 pm
மதுரையில் அடிக்கல் நாட்டிய 5 ஆண்டுகளுக்கு பிறகு எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் இன்று தொடங்கியது.
மதுரை மாவட்டம் தோப்பூரில் 222 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசு கடந்த 2018 டிசம்பரில் ஒப்புதல் அளித்து, 2019 ஜனவரியில் பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டிருந்தது. ஜப்பான் பன்னாட்டு நிதி நிறுவனமான ஜெய்காவுடன் கடனுக்கான ஒப்பந்தம் 2021 மார்ச்சில் கையெழுத்தானது. மொத்த நிதித் தேவையான ரூ.1977.8 கோடிகளில் 82% சதவீத தொகையான ரூ1627.70 கோடிகளை ஜெய்கா நிறுவனம் மூலம் கடனாக பெறப்படும் எனவும், மீதமுள்ள தொகையை இந்திய அரசு வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
சுற்றுச்சுவர் மட்டும் கட்டப்பட்டு ஐந்து ஆண்டுகளாக வேறெந்த கட்டுமான பணிகளும் நடைபெறாமல் இருந்தது. கடந்த 17 ஆகஸ்ட் 2023 அன்று மருத்துவமனை கட்டுமானத்திற்கான டெண்டர் அறிவிப்பை எய்ம்ஸ் நிர்வாகம் வெளியிட்டது.
கடந்த ஜனவரியில், ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் பயின்று வரும் எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 150 பேருக்கு போதிய இட வசதியும், மருத்துவ பயிற்சியும் கிடைக்காத காரணத்தால், அவர்களில் 100 பேரை மதுரைக்கு வாடகை கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்வதற்கான டெண்டர் அறிவிப்பை வெளியிட்டது எய்ம்ஸ் நிர்வாகம்.
திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அவர்களுக்கு மருத்துவ பயிற்சி அளிக்கும் நோக்கில் அந்த மருத்துவமனையில் இருந்து 10 கிமீ சுற்றளவுக்குள் 100 மாணவர்களுக்கான வகுப்புகள், விடுதி வசதிகளுடன் கூடிய கட்டிடத்தை வாடகைக்கு தருமாறு கோரிக்கை விடுத்திருந்தது.
தோப்பூரில் மருத்துவமனை கட்டுமானத்திற்கான டெண்டர் இறுதி செய்யப்பட்டு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைக்கப்பெற்ற நிலையில், கட்டுமான பணிகள் இன்று துவங்கியது. எய்ம்ஸ் மருத்துவகல்லூரி வாடகை கட்டிடத்திற்கான டெண்டரில் நான்கு கல்லூரிகள் தேர்வு செய்யப்பட்டு, மத்திய நிதிக்குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இம்மாதம் நடைபெறவுள்ள நிதிக்குழு கூட்டத்தில் அதற்கான ஒப்புதலும் கிடைத்துவிடும் என தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ச்சியாக 5 ஆண்டுகளாக எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கவில்லை என பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்த நிலையில் L&T நிறுவனம் இன்று கட்டுமான பணிகள் தொடங்கியுள்ளது.
மதுரை எய்ம்ஸ் கட்டுமானம்10 தளங்களாக 870 படுக்கை வசதிகளுடன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை -33 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என திட்டமிடப்பட்டுள்ளது.