மதுரை எய்ம்ஸ் விவகாரம்.. ONE SIDE GAME ஆடும் மத்திய அரசு ; அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றச்சாட்டு!!
Author: Babu Lakshmanan6 October 2022, 2:15 pm
மதுரை : மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரையில் சுந்தராஜபுரத்தில் நியாய விலைக் கடையையும், சுப்பிரமணியபுரத்தில் மாமன்ற உறுப்பினர் அலுவலகத்தை நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது ;- மக்களுக்கு இலவசங்கள் வழங்குவதற்கு நிதி ஆதாரங்கள் குறித்த உச்சநீதிமன்ற வழக்கில் 2013 ல் உச்சநீதிமன்றத்தில் வழக்கின் தீர்ப்புக்கும், தேர்தல் ஆணைய கடிதத்துக்கும் ஒன்றுக்கு ஒன்று முரண்பாடக உள்ளது.
ஒன்றிய அரசு பணத்தை (நிதி) வைத்து அரசியல் செய்வது தெளிவாக தெரிகிறது. ஒரே நேரத்தில் அறிவிக்கப்பட்ட இரு எய்ம்ஸ் மருத்துவமனை ஒன்று திறக்க போகிறார்கள், மற்றொன்று சுவர் கூட கட்டவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் ஒன்றிய அரசு ஒன் சைடு கேம் ஆடி வருகிறது. தமிழகத்தில் செயல்பட்டு வருகிற திட்டங்களை ஒன்றிய அரசு பெயர் மாற்றி வருகிறது.
பிரதமரின் பெயரை வைக்க வேண்டும் என்பதற்காக திட்டத்தின் முதல் ஆண்டில் 60 சதவீத பங்குத்தொகையை ஒன்றிய அரசு வழங்குகிறது. 2 ஆண்டில் 40 சதவீதம், 3ஆம் ஆண்டில் 20 சதவீதம் என படிப்படியாக நிதியை ஒன்றிய அரசு குறைக்கிறது. அரசியல் செய்யவே ஒன்றிய அரசு மாநில அரசுக்கு நிதியினை ஒதுக்கீடு செய்கிறது.
மக்கள் நலனுக்கான ஒன்றிய அரசு நிதிகளை ஒதுக்கீடு செய்யவில்லை. மகளிர்க்கு உரிமை தொகை வழங்குவதற்காக திரட்டப்பட்ட தகவல்களை ஆராய்ந்து வருகிறோம். தமிழக ஆலோசனை குழுவிடமும் தகவல்களை கேட்டு இருக்கிறோம்.
ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் தமிழகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் குதிரைப் பந்தயம், ஆன்லைன் விளையாட்டுகள், கேசினோ ஆகியவைகளை வரி வரம்புக்குள் கொண்டு வருவது குறித்த அறிக்கை தயாராகாத காரணத்தால் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தை நடத்த முடியவில்லை என ஒன்றிய அமைச்சர் கூறினார். ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தை விரைவாக நடத்த ஒன்றிய நிதியமைச்சருக்கு கோரிக்கை விடுத்து உள்ளேன், என கூறினார்.