அண்ணாமலையுடன் விஜய் இருப்பது போன்ற மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தை வெளியிட்ட youtube நிறுவனத்தின் மீது விசாரணை நடத்த அனுமதி அளித்து ஐகோர்ட் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மதுரை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உடன், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இருப்பது போன்ற புகைப்படம் வெளியிட்ட யூடியூப் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், “தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியைச் சந்தித்த புகைப்படத்தை, போலியாக மார்ஃபிங் செய்து, அதில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் படத்திற்குப் பதிலாக பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலையின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து பிரபல யூடியூப் சேனல், சமூக வலைத்தளங்களில் அந்த புகைப்படத்தையும், பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக விஜய் இருப்பது போன்ற வீடியோவையும் வெளியிட்டுள்ளனர்.
மேலும், இது எங்கள் கொள்கைக்கு எதிராக உள்ள கட்சித் தலைமையோடு, இணைத்து புகைப்படத்தை வெளியிடுவது மக்கள் மத்தியில் கட்சி மீது உள்ள நம்பிக்கையை சிதைக்கும் வகையில் உள்ளது. அந்த யூடியூப் சேனலில், விஜய்யை ஆட்டி வைக்கும் பாஜக மொத்தமாக பாஜகவின் ஏஜெண்டாக மாறிய விஜய் என அவதூறான கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.
தற்போது, இது வாக்காளர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி, வாக்காளர்களின் மனநிலையைச் சிதைக்க செய்துள்ளது. எனவே, இந்த யூடியூப் சேனல் மீதும், அதன் உரிமையாளர்கள் மீதும் உரிய விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை, நேற்று (ஜன.2) நீதிபதி நிர்மல் குமார் முன்பு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிணைய் காஸ், “மனுதாரரின் கட்சி கொள்கைக்குச் சம்பந்தமில்லாத மாற்றுக் கட்சித் தலைவரின் புகைப்படத்தோடு இணைத்து யூடியூப் உள்பட சமூக வலைத்தளங்களில் பொய்யான செய்திகளைப் பரப்பியுள்ளனர்.
இது குறித்து புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்” என வாதிட்டார்.
இதையும் படிங்க: வெட்கமாக இல்லையா? வீட்டுக் காவலில் பாஜக மகளிர் அணி நிர்வாகிகள்.. அண்ணாமலை கடும் தாக்கு!
இதனைப் பதிவு செய்த நீதிபதி, அரசியல் கருத்தியல் தொடர்பில்லாத நபர்களோடு புகைப்படங்களை மார்ஃபிங் செய்து படம் வெளியிட்டது தொடர்பாக மனுதாரர் வருகின்ற 20ஆம் தேதி அன்று, தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புதிய புகார் ஒன்றை கொடுக்க வேண்டும் என்றும், அந்தப் புகாரின் படி காவல்துறை ஆய்வாளர் உரிய விசாரணை மேற்கொண்டு 2 மாதத்திற்குள் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.