உறவினர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் சிறுமிகள்.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு!
Author: Hariharasudhan29 November 2024, 3:40 pm
சிறுமிகளுக்கு எதிராக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தரக்கூடிய பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க கடுமையான தண்டனை வழங்கும் வகையில் தனிச் சட்டத்தை மாநில அரசு இயற்ற வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்து உள்ளது.
மதுரை: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சேர்ந்த ஒரு பெண்ணின் கணவர் உயிரிழந்துவிட்டார். அந்த நேரத்தில், இவர்களுக்கு 4 மாத பெண் குழந்தை இருந்துள்ளார். இந்த நிலையில், அந்தப் பெண், ரவிச்சந்திரன் என்பவரை மறுமணம் செய்து கொண்டார். இதையடுத்து, அந்தப் பெண் குழந்தை இவர்கள் இருவரது பராமரிப்பில் பள்ளியில் படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், ரவிச்சந்திரன் தொடர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததால், அவர் கர்ப்பம் அடைந்து உள்ளார். பின்னர், இது குறித்தான புகாரின் பேரில் கடந்த 2019ஆம் ஆண்டு, அறந்தாங்கி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, ரவிச்சந்திரனை கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம், ரவிச்சந்திரனுக்கு ஆயுள் தண்டனை விதித்தது மட்டுமல்லாமல், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. எனவே, இந்த தண்டனையை ரத்து செய்யக் கோரி ரவிச்சந்திரன், சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் பூர்ணிமா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, “பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் சிறுமியின் உடல், அவரை மன ரீதியாக மிகுந்த பாதிப்புக்கு உள்ளாக்கும். இதைச் சொல்வதற்கு வார்த்தைகளே கிடையாது.
உடலில் ஏற்பட்ட காயம் ஆறிவிடும், ஆனால் மனதில் ஏற்பட்ட காயம் வாழ்நாள் முழுவதும் இருக்கும். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் சிறுமிகள் குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு அறிக்கை வெளியிட்டு உள்ளனர். அதில், பாதிக்கப்பட்ட சிறுமிகள் அச்ச உணர்வுடன் இருப்பார்கள், படிப்பில் கவனம் செலுத்த முடியாது, குணாதிசியம் தனித்துவம் முற்றிலும் மாறிவிடும் என தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சமந்தாவுக்கு ரூட்டு விடும் பாலிவுட் நடிகர்…அட ஜோடி பொருத்தம் பக்கவா இருக்குமே..!
சிறுமிகளுக்கு எதிரான பெரும்பாலான பாலியல் வன்கொடுமைகள் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலமே ஏற்படுகிறது. எனவே, சிறுமிகளுக்கு எதிராக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தரக்கூடிய பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க கடுமையான தண்டனை வழங்கும் வகையில் தனிச் சட்டத்தை மாநில அரசு இயற்ற வேண்டும்.
மேலும், பாலியல் வன்கொடுமை தொடர்பாக பள்ளிகளில் விழிப்புணர்வு முகாம் நடத்திட வேண்டும். குழந்தைகள் நலக் குழுவானது, மாணவிகள் தங்கியுள்ள விடுதிகள் மற்றும் பள்ளிகளில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவுகள் உள்ளனவா என்பதை ஆராய வேண்டும்” என நீதிபதிகள் தெரிவித்தனர்.