படத்திற்கு தடை கோருவது ஃபேஷன் ஆகிவிட்டது.. ஐகோர்ட் கிளை தடாலடி!
Author: Hariharasudhan27 December 2024, 6:52 pm
ஒரு திரைப்படத்திற்கு தடை கோருவது தற்போது ஃபேஷனாகி விட்டதாக உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்து உள்ளது.
மதுரை: உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதிகள் வேல்முருகன் மற்றும் ஜோதிராமன் அமர்வு முன்பு, இன்று வழக்கறிஞர் கார்த்திக் இன்று ஆஜரானார். அப்போது, அவர், “ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள ‘சொர்க்கவாசல்’ என்ற திரைப்படம் இன்று ஓடிடி தளத்தில் வெளியிடப்படுகிறது.
படத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனைப் பற்றி தவறாகச் சித்தரிக்கப்பட்டு உள்ளது. இதனால் வீரபாண்டிய கட்டபொம்மனைப் பின்பற்றக் கூடியவர்கள் அவமதிக்கப்பட்டு உள்ளனர். எனவே, இந்த திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்” எனக் கோரினார்.
இதனையடுத்து நீதிபதிகள், “மாநிலம் முழுவதும் வெளியாகும் திரைப்படத்திற்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு எவ்வாறு தடை விதிக்க முடியும்? அது மட்டுமல்லாமல், இப்போது இது ஒரு ஃபேஷனாக மாறியுள்ளது. ஒரு படத்தை எடுப்பது, அதை தடை விதிக்கக் கோரி வழக்கு தாக்கல் செய்து படத்தை பிரபலமாக்குவது போன்ற செயல்களில் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒரு திரைப்படம் என்பது மிகவும் சிரமப்பட்டு, அதிகம் செலவிட்டு எடுக்கப்படுகிறது. அவ்வாறு எடுக்கப்படக்கூடியத் திரைப்படங்களுக்கு தடை விதிக்கக் கோரி மனுத் தாக்கல் செய்வது ஏற்புடையது அல்ல. வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாறு மனுதாரருக்கு தெரியுமா?
இதையும் படிங்க: பழனி அடிவாரத்தில் கிடந்த பெண் சடலம்.. பகீர் கிளப்பிய உல்லாசக் கதை!
அப்படி தெரிந்தால்தான், அதில் எது தவறு? எது சரி? என்ற முடிவுக்கு வர முடியும். அவ்வாறு தெரியாத பட்சத்தில், எவ்வாறு திரைப்படத்திற்கு தடை விதிக்க முடியும்? ஒரு திரைப்படத்தில் சில கருத்துக்கள் வந்தாலும், அந்த கருத்தை சர்ச்சையாக்குவதால் அதிகமானவர் அதைப் பார்க்கக் கூடிய சூழலும் ஏற்படுகிறது.
திரைப்படத்தை பொழுதுபோக்காக விட்டுவிட்டால், அது யாருக்கும் தெரியாமலே போய்விடும். மேலும், இந்த நீதிமன்றத்திற்கு நாடு முழுவதும் தடை விதிப்பதற்கு எப்படி அதிகாரம் இருக்கிறது? எனவே, சென்னை உயர் நீதிமன்றத்தை மனுதாரர் அணுகலாம் அல்லது உச்ச நீதிமன்றத்தை அணுகலாம். எனவே இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது“ எனக் கூறி உத்தரவிட்டனர்.