வைகை ஆற்றில் திமுகவினர் மணல் கொள்ளை… ஆதாரத்துடன் காவல் ஆணையரிடம் பாஜகவினர் பரபரப்பு புகார்!!
Author: Babu Lakshmanan19 March 2024, 9:31 pm
மதுரை விளாங்குடி பகுதி வைகை ஆற்றில் ஆளும் திமுகவை சேர்ந்த சிலர் மணல் கொள்ளையில் ஈடுபடுவதாக பாஜக உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் வீரமுத்து மதுரை மாநகர் போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளித்தார்
அவரது மனுவில் கூறியிருப்பதாவது:- விளாங்குடி பகுதியில் கடந்த பல வருடங்களாக மணல் கொள்ளை அதிகரித்து வருகிறது. இதனால் மணல் கொள்ளையில் ஈடுபடுவோரிடையே அவ்வப்போது சண்டை, கொலைவெறி தாக்குதல் நடப்பதும், புகார் அளிக்க செல்வோரிடம் போலீசார் ஸ்டேஷன் வெளியிலேயே சமரசம் பேசி அனுப்பி விடுகின்றனர்.
பரவை ஒருங்கிணைந்த காய்கறி மார்க்கெட் ஆற்றங்கரை பகுதியில் சுமார் 2 கி.மீ.,க்கு இந்த மணல் கொள்ளை நடக்கிறது. அப்பகுதியில் உள்ள கட்டிடங்களுக்கு தேவையான மணல் வைகை ஆற்றின் கரையில் அள்ளி விற்பனை செய்கின்றனர். இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்படுகிறது. போலீசாருக்கும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும் தெரிந்தும் அவர்களுக்கு கமிஷன் செல்வதால் மணல் கொள்ளை பற்றி அவர்கள் கண்டு கொள்வதில்லை.
கிராமத்து இளைஞர்கள் இது போன்ற மணல் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுபவர்களிடம் தட்டி கேட்டால் அவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழ்நிலை ஏற்படுகிறது.
எனவே இது போன்ற மணல் கொள்ளையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்வதோடு மணல் கொள்ளையில் ஈடுபடும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும், என அவரது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.