மதுபானக் கடைகளில் ஸ்டாலின் படம் வேண்டும்.. மதுரை பாஜக நூதன முறையில் மனு!
Author: Hariharasudhan8 January 2025, 7:31 pm
அரசு மதுபானக் கடைகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் இடம்பெறக் கோரி மதுரை பாஜகவினர் ஆட்சியரிடம் மனு அளித்து உள்ளனர்.
மதுரை: தமிழக அரசு நடத்துகின்ற அரசு மதுபானக் கடைகளில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் இடம்பெற கோரி, மதுரை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து நூதன முறையில் பாஜகவினர் மனு அளித்துள்ளனர். இது தொடர்பாக பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினர் மற்றும் பிரச்சார பிரிவு மதுரை மாவட்ட பார்வையாளர் சரவணன் பேட்டி அளித்துள்ளார்.
அதில் பேசிய அவர், “தமிழகத்தில் அரசு நடத்துகின்ற மதுபானக் கடைகளில் 318 கடைகள் பாதியாக குறைக்க வேண்டும் என்பதே வேண்டுகோள். ஆனால், தூத்துக்குடி திமுக எம்பி கனிமொழி, தமிழகத்தில் இளம் விதவைகள் அதிகமாக உள்ளனர் என பேசினார். தற்போது கடந்த நான்கு ஆண்டுகளில் விதவைகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் என நினைக்கிறேன்.
எங்களுக்கு தேவை பூரண மதுவிலக்கு. இது வேண்டும் என்பதே எங்களது குறிக்கோள். எனவே, தமிழக அரசு நடத்துகின்ற மதுபானக் கடைகளில் முதல்வர் புகைப்படம் இடம்பெற வேண்டும். கூட்டுறவு மருந்து கடைகள், அரசு அலுவலகங்கள், நியாய விலைக் கடைகள் என அனைத்திலும் முதல்வர் படம் உள்ள நிலையில், தமிழக அரசு நடத்துகின்ற மதுபானக் கடைகளில் ஏன் முதல்வர் புகைப்படம் வைக்க கூடாது என மதுப்பிரியர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: திமுக அனுதாபிக்கே அப்படினா.. நிர்வாகிக்கு? கிழித்தெடுத்த வானதி சீனிவாசன்!
அதன் விளைவாகவே, தற்போது மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து, முதல்வர் புகைப்படத்துடன் மனு அளிக்க வந்ததாக பாஜக நிர்வாகிகள் தெரிவித்தனர்.