‘ஓட்டு போட பணம் வாங்காதீங்க’…கட்டுக்கட்டாக பணத்துடன் வந்து வேட்புமனு தாக்கல்: விழிப்புணர்வு ஏற்படுத்திய சமூக ஆர்வலர்..!!
Author: Rajesh31 ஜனவரி 2022, 5:23 மணி
மதுரை: வாக்களிக்க பணம் பெற வேண்டாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் டம்மி பணக் ட்டுகளுடன் வந்து வேட்புமனுதாக்கல் செய்த சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 24வது வார்டில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் சங்கரபாண்டியன் என்ற சமூக ஆர்வலர் கட்டுகட்டான டம்மி பணத்துடன் ‘வாக்காளர்கள், வாக்களிப்பதற்கு பணம்பெற வேண்டாம்’ என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார்.
ஓட்டுக்கு பணம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம் என்ற வாசகம் அடங்கிய பதாகையை ஏந்தியபடி கையில் தட்டு முழுவதும் 2,000, 500 மற்றும் 200 ரூபாய் டம்மி பணத்தை கட்டுகட்டாக அடுக்கிவைத்தபடி வந்து மதுரை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் இன்று வேட்புமனுதாக்கல் செய்தார்.
மண்டல அலுவலகத்திற்கு வாசல் முன்பு வரை டம்மி பணம் மற்றும் பாதகைகளுடன் வேட்பாளர் அனுமதிக்கப்பட்ட நிலையில், வேட்புமனு தாக்கல் செய்யும் போது வேட்புமனுவுடன் மட்டும் அனுமதிக்கப்பட்டார். பின் தேர்தல் அலுவலரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சுயேட்சை வேட்பாளர் சங்கரபாண்டியன் பேசியபோது, மாநகராட்சி பகுதியில் பல்வேறு திட்டங்களில் முறைகேடு நடந்துள்ளதால் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை. வாக்காளர்கள் பணத்தை பெற்றுகொண்டு வாக்களித்தால் அது டம்மி பணத்தை போன்று டம்மியான மதிப்பில்லாத வாக்காக மாறிவிடும் என்பதை உணர்த்தும் வகையில் இது போன்று டம்மி பணத்துடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
0
0