மதுரை மாநகராட்சியை கண்டித்து 7ம் தேதி சென்ட்ரல் காய்கறி மார்க்கெட்டில் கடையடைப்பு : வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு

Author: Babu Lakshmanan
5 December 2022, 2:24 pm

மதுரை :மதுரை மாநகராட்சியை கண்டித்து சென்ட்ரல் காய்கறி மார்க்கெட்டில் 7ம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுவதாக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

மதுரை மாட்டுத்தாவணியில் சென்ட்ரல் காய்கறி மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு 1830 கடைகள் உள்ளன. இந்த நிலையில், மதுரை மாநகராட்சியின் சட்டமீறலை கண்டித்து நாளை மறுநாள் (7-ம் தேதி) புதன்கிழமை கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று வியாபாரிகள் சங்கம் தெரிவித்து உள்ளது.

இதில் மாட்டுத்தாவணி தக்காளி மற்றும் சீமை காய்கறி வியாபாரிகள் சங்கம், மதுரை வாழை இலை கமிஷன் மண்டி உரிமையாளர் சங்கம், தக்காளி, காய்கனி அழுகும் பொருட்கள் மற்றும் மாத வாடகை வியாபாரிகள் பொதுநல சங்கம், ஒருங்கிணைந்த காய்கனி வணிக வளாக வியாபாரிகள் சங்கம் ஆகியவை கலந்து கொள்ள உள்ளன.

இது தொடர்பாக சங்க தலைவர்கள் நீலமேகம், முருகன், சேகர், மோகன்ராஜ், ஆகியோர் கூறியதாவது;- நாங்கள் மதுரை சென்ட்ரல் மார்க்கெட் பகுதியில் கடந்த 118 ஆண்டுகளாக வியாபாரம் செய்து வருகிறோம். மாநகராட்சியின் அத்துமீறல் காரணமாக எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. தேசிய பேரிடர் காலத்தில் உயர்த்தப்பட்ட 36 மாத வாடகை உயர்வை ரத்து செய்ய பல்வேறு நிலைகளில் போராட்டம் நடத்தி வருகிறோம்.

கடந்த 2016-2017ம் ஆண்டு வரை 14 மாத கால வாடகை பாக்கியை ரத்து செய்ய வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்து உள்ளது. அதேபோல நிலுவை தொகையை ரத்து செய்ய வேண்டும், அபராத வட்டியை ரத்து செய்ய வேண்டும், என்று நீதிமன்றம் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன் அடிப்படையில் மதுரை மாநகராட்சி சென்ட்ரல் மார்க்கெட் வியாபாரிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இதன் அடிப்படையில் உயர்த்தப்பட்ட வாடகையை திருத்தம் செய்ய வேண்டும்.

மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில் 1836 கடைகள் உள்ளன. இதில் 1000 கடைகளில் எங்கள் சங்க உறுப்பினர்கள் வியாபாரம் செய்து வருகின்றனர். சென்ட்ரல் மார்க்கெட் என்பது சுடுகாட்டு பகுதியாகும். இங்கு எங்களுக்கு தற்காலிகமாக கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அப்போது மத்திய- மாநில அரசுகள் சார்பில் 27 ஏக்கர் இடம் ஒதுக்கீடு செய்து 85 கோடி ரூபாய் மாநில அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது.

ஆனால் மத்திய அரசு நிதி தரவில்லை என்பதை காரணம் காட்டி அந்த திட்டம் கைவிடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மாநகராட்சியிடம் புகார் அளிக்க சென்றால் எங்களை அலைக்கழித்து வருகின்றன. மதுரை சென்ட்ரல் மார்க்கெட் தொடர்பாக நீதிமன்றத்தில் 64 வழக்குகள் நிலுவையில் உள்ளன. நாங்கள் சென்ட்ரல் மார்க்கெட்டில் 118 ஆண்டுகளாக வியாபாரம் செய்து வருகிறோம். மதுரை மாநகராட்சியின் அநீதி- அத்துமீறலை கண்டித்து வருகிற 7-ம் தேதி கடை அடைப்பு நடத்த உள்ளோம், என்று தெரிவித்து உள்ளனர்.

  • again ajith join with adhik ravichandran in ak 64AK 64- திரும்பவும் ஆதிக் ரவிச்சந்திரனோடயா? குட் பேட் அக்லி படத்தில் இடம்பெற்ற Hint!