விஜய்க்கு மதுரையில் நெருக்கடி.. கூண்டோடு தூக்கிய நகராட்சி!

Author: Hariharasudhan
12 November 2024, 1:31 pm

தவெக சார்பில் மதுரையில் வழங்கப்பட்டு வந்த விலையில்லா விருந்தகத்தின் பூத் அகற்றப்பட்டது அரசியல் அழுத்தம் என அக்கட்சி நிர்வாகி கூறியுள்ளார்.

மதுரை: கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய், அதன் முதல் மாநில மாநாட்டை விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வி.சாலை என்னும் கிராமத்தில் நடத்தினார். இதில், இனிமேல் நாம் செய்யும் ஒவ்வொன்றையும் சரியாக செய்ய வேண்டும், நம்மை பலரும் கண்காணிப்பர் என விஜய் கூறியிருந்தார்.

இந்த நிலையில், விலையில்லா விருந்தகம் என்ற திட்டத்தையும் விஜய் தொடங்கி வைத்திருந்தார். அந்த வகையில், மதுரை தவெக சார்பாக விலையில்லா விருந்தகம் என்ற பேரில், மதுரை மத்திய தொகுதி நிர்வாகி சிராஜுதீன் தலைமையில், தினமும் சுமார் 250க்கும் மேற்பட்ட ஏழை, எளிய  மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இதன்படி, மதுரை தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நேதாஜி ரோடு பகுதியில், மத்திய தொகுதி நிர்வாகிகள் இந்த தினசரி விலையில்லா விருந்தகம் மூலம் ஏழை உணவு வழங்கி வந்தனர். இதற்காக பூத் ஒன்றும் அமைக்கப்பட்டு இருந்தது. இதில் வைத்து தான் நிர்வாகிகள் உணவளித்து வந்தனர்.

ஆனால், இந்த விருந்தகம் மூலம் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், அதேநேரம் இதற்காக முறையான அனுமதி பெறாமலே செயல்பட்டு வந்ததாகவும் கூறி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நேற்றைய முன்தினம் அந்த விலையில்லா விருந்தகத்தின் பூத்தை அகற்றி உள்ளது.

எனவே, மதுரை மத்திய தவெகவினர் வேறு ஒரு இடத்தில் தற்காலிக பூத் அமைத்து நேற்று விருந்தகம் சார்பில் உணவு வழங்கினர். மேலும், இது குறித்து இதுகுறித்து தவெக மத்திய தொகுதி நிர்வாகி சிராஜுதீன் ஊடகத்திடம் கூறுகையில், “கடந்த 150 நாட்களாக ஏழை எளிய மக்கள், நடைபாதை வியாபாரிகள், பாதசாரிகள் ஆகியோர் பயன்பெறும் வகையில் இந்த விலையில்லா விருந்தகம் மூலம் தினசரி உணவு வழங்கப்பட்டு வந்தது.

VILAIYILLAA VIRUNTHAGAM

அந்த நாள் வரையில் மாநகராட்சி சார்பில் எந்தவித தடையும், இடையூறும் இல்லாமல் பொதுமக்களுக்கு உணவு சமைத்து வழங்கப்பட்டு வந்தது. தவெக முதல் மாநில மாநாடு நடந்த முடிந்த பிறகு தான் பல்வேறு நெருக்கடிகளை எங்களுக்கு மேலிடத்திலிருந்து அழுத்தம் என்று மாநகராட்சி அதிகாரிகள் எங்களிடமே கூறுகின்றனர்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஊற்றிக் கொடுத்த PET சார்.. மாணவிகளுக்கு நேர்ந்த கொடுமை.. திருச்செந்தூர் வழக்கில் திருப்பம்!

அதேநேரம், இது குறித்து மதுரை மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் பிரபல ஊடகத்திடம் கூறுகையில், “தமிழக வெற்றிக் கழகத்தினர் உணவு வழங்குவது போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துவதால், அந்த பூத்தினை மதுரை மாநகராட்சி அகற்ற வேண்டும் என்று காவல்துறையினர் கேட்டுக் கொண்டனர்.

இதன் பேரில் தான் அந்த பூத் அகற்றப்பட்டது. விலையில்லா விருந்தகம் மூலம் உணவு வழங்க போலீசார் உரிய அனுமதி அளித்தால், மதுரை மாநகராட்சிக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை” எனக் கூறியுள்ளார். இந்தச் சம்பவத்தால் தவெகவினருக்கு புது சிக்கல் வந்துள்ளது.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!