மாநகராட்சி ஊழியர்களின் அலட்சியம்… நெடுந்தூர போக்குவரத்து நெரிசல் ; சிக்கி தவித்த ஆம்புலன்ஸ்!!
Author: Babu Lakshmanan22 July 2022, 9:42 pm
மந்த கதியில் மதுரை மாநகராட்சி ஊழியர்கள் பணியாற்றியதால் நெடுந்தூர போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் சிக்கி தவித்தது சக வாகன ஓட்டிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை அரசரடி நீரேற்றம் நிலையம் அருகாமையில் குடிநீர் விநியோக செய்யும் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு தார் சாலையில் இருந்து நீரூற்றாக குடிநீர் வீணாகி கொண்டிருந்தது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையரிடத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று காலை முதல் மாநகராட்சி பணியாளர்கள், சாலையில் பெரிய பள்ளம் தோண்டி குழாய் உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இறுதியாக உடைப்பை சரி செய்த பின்னர் பள்ளத்தை முறையாக பாதுகாப்பாக மூடி செல்லாமல் அரைகுறையாக மணலை கொண்டு மூடி சென்றனர். இதனை அறிந்த போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள், மாநகராட்சி ஊழியர்களிடம், இந்த சாலையில் கனரக வாகனங்கள் அதிகம் செல்லும் முக்கிய சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தை முறையாகவும், பாதுகாப்பாகவும் மூட அறிவுறுத்தினர். ஆனால், காதில் வாங்காமல் மணலை கொட்டி செல்ல முயன்றவ அவர்களை, காவலர்கள் எச்சரித்து சாலையை சீர்படுத்த உத்தரவிட்டனர்.
இதனால் செய்வதறியாது திகைத்த மாநகராட்சி ஊழியர்கள் உயர் அதிகாரிகளிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பள்ளத்தை சீர் செய்வதற்கான பணியை துவங்கினர்.
இந்த நிலையில், சுமார் 8 மணி நேரத்திற்கு மேலாக மந்த கதியில் மாநகரின் முக்கிய சாலையில் குடிநீர் குழாய் சீரமைப்பு பணியை அலட்சியமாக செய்து வந்ததால், அவ்வழியாக வாகனங்கள் செல்ல போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
இதனால் மறு மார்க்கத்தில் செல்லும் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல்களில் நெடுந்தூரம் சிக்கி வாகன ஓட்டிகள் தவித்தனர். மேலும், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர சேவைக்கான வாகனங்களும் போக்குவரத்து நெரிசலில் தவித்து பெரும் சிரமத்திற்கு ஆளாகின.