அப்பள கம்பெனிக்குள் புகுந்து பணம் கேட்டு கொலை மிரட்டல் : வெளியான சிசிடிவி காட்சி… 5 பேரிடம் போலீசார் விசாரணை!!
Author: Babu Lakshmanan24 February 2023, 8:56 pm
மதுரை : மதுரையில் அப்பள கம்பெனிக்குள் புகுந்து பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த கும்பலின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை சிந்தாமணி பகுதியை சேர்ந்த திருமுருகன் என்பவர் ராஜமான் நகர் பகுதியில் அப்பள கம்பெனி நடத்தி வருகிறார். நேற்று மாலை அவரது கம்பெனிக்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்டதோடு பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதனையடுத்து, அப்பள கம்பெனி உரிமையாளர் திருமுருகனுக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து கீரைத்துறை காவல்நிலையத்தில் திருமுருகன் அளித்த புகாரின் கீழ் அப்பள கம்பெனியில் பொறுத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் விரதனூர் பகுதியில் திருமுருகன் நிலம் வாங்கியது தொடர்பாக பிரச்சினை காரணமாக அப்பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் கும்பல் பணம் கேட்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து கொலை மிரட்டல் விடுத்த விரதனூர் பகுதியை சேர்ந்த முருகேசன், சிவக்குமார், செல்வப்பாண்டி, சமையன், சந்தோஷ் குமார் ஆகியோரை கீரைத்துறை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.