அடகு கடை லாக்கரை உடைக்கும் முயற்சி தோல்வி… குப்பைகளை சுத்தம் செய்ய வந்த மாநகராட்சி ஊழியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!
Author: Babu Lakshmanan6 June 2022, 9:36 pm
மதுரையில் அடகு கடையில் கொள்ளையடிக்க முயன்ற கொள்ளையர்கள், லாக்கரை லாக்கரை குப்பைத்தொட்டியில் வீசி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரை கோ.புதூர் பகுதியை சேர்ந்தவர் வைத்தியநாதன். இவர் பாரதியார் ரோடு பகுதியில் சொந்தமாக விசாலாட்சி என்ற பெயரில் அடகு கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், நேற்று இரவு அடகு கடைக்கு வந்த மர்ம கும்பல் அடகு கடையின் பூட்டை உடைத்து அடகு கடையில் இருந்த நகையை கொள்ளை அடிக்க முயற்சி செய்துள்ளனர்.
இருப்பினும், லாக்கரை உடைக்க முடியாததால் அலேக்காக தூக்கிக் கொண்டு சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் தரதரவென இழுத்துச் சென்று மாநகராட்சிக்கு சொந்தமான குப்பைத்தொட்டியில் மறைத்து வைத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், இன்று காலை சுத்தம் செய்ய வந்த மாநகராட்சி ஊழியர் லட்சுமி மற்றும் முத்து லாக்கர் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறை அதிகாரிகள் தகவல் கொடுத்துள்ளனர். அதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் லாக்கரை கைப்பற்றினர்.
மேலும், தடயவியல் நிபுணர்கள் அழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்ட அந்த பகுதியில் இருக்கக்கூடிய சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். மேலும், குப்பைத்தொட்டி லாக்கர் இருப்பதைக் கண்டவுடன் துரிதமாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்த மாநகராட்சி ஊழியர்கள் லட்சுமி மற்றும் முத்து ஆகியோரை காவல்துறையினர் வெகுவாக பாராட்டி உள்ளனர்.