கால் மணிநேரத்தில் மதுரையில் கொட்டித் தீர்த்த கனமழை.. வரலாற்று மழைப்பதிவு!
Author: Hariharasudhan26 October 2024, 11:21 am
மதுரையில் கிட்டத்தட்ட சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு அதிக கனமழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
மதுரை: தூங்காநகரமான மதுரை, நேற்று பெய்த கனமழையால் தூக்கம் தொலைத்து காணப்பட்டது. நேற்று பிற்பகல் 2 மணிக்கு மேல் பெய்யத் தொடங்கிய கனமழை விடிய விடிய கொட்டித் தீர்த்தது. இதனால் மதுரை மாநகரின் பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கின. பல்வேறு இடங்களில் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர். தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக, மதுரை கோரிப்பாளையம், தெப்பக்குளம், அண்ணா நகர், பெரியார் பேருந்து நிலையம், தல்லாக்குளம், சிம்மக்கல், மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகராட்சிப் பகுதிகளிலும் கனமழை கொட்டித் தீர்த்தது. அதேபோல், கண்மாய் உடைப்பு ஏற்பட்டதால், முல்லை நகர் பகுதி முழுவதும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் அங்குள்ள குடியிருப்புகளுள் வெள்ளநீர் புகுந்தது. இதன்படி, மதுரையில் மாலை 3 மணி முதல் 3.15 வரையிலான 15 நிமிடத்தில் 4.5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அதேபோல், மதுரையில் நேற்று காலை முதல் மாலை வரையிலும் 9.8 செ.மீ மழை பெய்துள்ளது. இந்த நிலையில், மதுரை மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு மற்றும் மதுரை வடக்கு ஆகிய இரண்டு வருவாய் வட்டங்களுக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார்.
இதனிடையே, மதுரையில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் நடைபெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து அமைச்சர் மற்றும் அரசு அதிகாரிகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். மேலும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது சென்னை முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலி வாயிலாக அமைச்சர்கள், ஆட்சியரிடம் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
இதையும் படிங்க : திருப்பதியை அலற விட்ட ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள்.. ஹோட்டல்களில் போலீசார் அதிரடி ரெய்டு!
இந்த நிலையில் தான், உலகப் புகழ்பெற்ற மதுரை மாநகரில் 70 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் 10 செமீ மழை கொட்டித் தீர்த்துள்ளது. மேலும், இன்று திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, இன்று பள்ளிகளுக்கு வழக்கமான வார விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தாலும், சிறப்பு வகுப்புகள் ஏதேனும் நடத்த உத்தேசித்துள்ள பள்ளிகள் அவற்றை நடத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.