மதுரை ஜல்லிக்கட்டு போட்டி.. காளைகளுக்கான முன்பதிவு எப்போது? தேதியுடன் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan9 January 2023, 9:13 pm
மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொள்ளும் மாடுகளுக்கான பதிவுகளையும் madurai.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
பதிவு செய்யப்படும் காளைகள் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய மூன்று கிராமங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டுகளில் ஏதாவது ஒரு கிராமத்தில் மட்டுமே கலந்து கொள்ள அனுமதியளிக்கப்படும்.
ஐல்லிக்கட்டில் கலந்துகொள்ளவுள்ள மாட்டின் உரிமையாளர்கள் madurai.nic.in இணையதளம் மூலம் தங்களது பெயர்களை 10.01.2023 தேதி நண்பகல் 12.00 முதல் 12.01.2023 தேதி மாலை 05.00 மணி முடிய பதிவு செய்திடல் வேண்டும்.
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ள காளையுடன் ஒரு உரிமையாளர் மற்றும் காளையுடன் நன்கு பழக்கமுள்ள ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

இருவரும் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் தேதியிலிருந்து இரண்டு நாட்களுக்குள் கோவிட் தொற்று இல்லை (RT PCR Test) என்பதற்கான சான்றினை வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
பதிவு செய்தவர்களின் சான்றுகள் சரிபார்க்கப்பட்டபின் தகுதியான நபர்களுக்கு மட்டுமே டோக்கன் பதிவிறக்கம் செய்ய இயலும். அவ்வாறு டோக்கன் பதிவிறக்கம் செய்த நபர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு விளையாட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.