காளையர்களுக்கு QR code, ஆதார் எண்ணுடன் டோக்கன்.. ஜரூரில் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள்: மதுரையில் போலீசார் குவிப்பு

Author: Babu Lakshmanan
13 January 2023, 7:17 pm

ஜல்லிக்கட்டு போட்டியில் ஆள்மாறாட்டத்தை தடுக்கும் நோக்கில், QR code, ஆதார் எண்ணுடன் டோக்கன் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் ஜன., 15,16,17 தேதிகளில் நடைபெறவுள்ள மூன்று ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு 9,699 காளைகளும், 5,399 மாடு பிடி வீரர்களும் என மொத்தம் 15,098 விண்ணப்பங்கள் பதிவாகியிருந்தன.இவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு தகுதியான நபர்களுக்கு டோக்கன் தரவிறக்கம் செய்யும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

டோக்கனில் போட்டியாளர்/காளை உரிமையாளர் பெயர் மற்றும் போட்டோ, அனுமதி சீட்டு எண், போட்டி நடைபெறும் இடம், கைபேசி எண், ஆதார் எண் ஆகிய விபரங்களுடன் சேர்த்து QR code இணைக்கப்பட்டுள்ளது. இந்த விபரங்கள் சேர்க்கப்பட்டு உள்ளதால் போட்டியின் போது ஆள் மாறாட்டம் உள்ளிட்ட முறைகேடுகள் தடுக்கப்படும்.

இதனிடையே, மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் பொங்கல் திருநாளையொட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்த தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க், வாடிவாசல், மாடு பிடிக்கப்படும் இடம், பார்வையாளர் மாடம், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வுகள் மேற்கொண்டார்.

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி பாதுகாப்பு பணியில் 3000 போலீசார் ஈடுபடுத்தபடுவார்கள் என்று தென்மண்டல ஐஜி தெரிவித்தார். மேலும், அவர் பேசியதாவது :- அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பாதுகாப்பு பணியில் 3000 போலீசார் ஈடுபடுவர். போலீசார் பணி நேரம் சுழற்சி முறையில் இருக்கும். கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெறும், என தெரிவித்தார்.

இதில் மதுரை டி ஐ ஜி பொன்னி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கமிட்டி,யினர் பேரூராட்சி பணியாளர்கள் உட்பட பலர் இருந்தனர்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்